• May 17, 2024

மதுரையில் அ.தி.மு.க. மாநாடு தொடங்கியது; தொண்டர்கள் குவிந்தனர்

 மதுரையில் அ.தி.மு.க. மாநாடு தொடங்கியது; தொண்டர்கள் குவிந்தனர்

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பு ஏற்றபின் அக்கட்சியின் மாநில அளவிலான மாநாடு மதுரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இதற்காக மதுரை வலையங்குளத்தில் கருப்புசாமி கோவில் அருகே பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டின் முகப்பானது கோட்டை போன்றும், அதில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவ அமைப்புகளும் அமைக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி படமும் வைக்கப்பட்டு இருக்கிறது. லட்சக்கணக்கானோர் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அ.தி.மு.க. மாநில மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
அ.தி.மு.க. தொடங்கி 51-ம் ஆண்டினை குறிக்கும் விதமாக 51 அடி உயர கொடிக்கம்பத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சி கொடியேற்றினார். அப்போது வானில் பறந்த ஹெலிகாப்டரில் இருந்து பன்னீர் ரோஜா பூக்கள் தூவப்பட்டன.
கொடியேற்றம் முடிந்ததும் ஜெயலலிதா பேரவை சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு, 3 ஆயிரம் தொண்டர்கள் அணிவகுத்து வந்து மரியாதை அளித்தனர். முன்னதாக மாநாட்டுக்கு புறப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பூஜை செய்யப்பட்ட 5.5 அடி உயர வெள்ளி வேல் வழங்கினர்.

அதனைத்தொடர்ந்து மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டு உள்ள அ. தி. மு. க. சாதனை விளக்க கண்காட்சியை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த கண்காட்சி அரங்கத்தில் அ.தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்த விளக்க படங்களும், முக்கிய திட்டங்களை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இடம் பெற்று உள்ளன. மாநாட்டு திடலில், கலை நிகழ்ச்சிகள், கவியரங்குகள் நடக்கின்றன. மாலை 4 மணிக்கு மாநாட்டு உரை நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் முன்னிலை வகித்து பேசுகின்றனர். மாலை 5 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி மாநாட்டு தலைமை உரை நிகழ்த்துகிறார்.
அ.தி.மு.க. ஆட்சிக்கால திட்டங்கள், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து அவர் பேசுகிறார்.
தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அதன்பின் நன்றியுரையுடன் மாநாடு நிறைவு பெறுகிறது.

மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை முதல் இரவு வரை 10 லட்சம் பேருக்கு சைவ உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் 2000 பேர் ஈடுபட்டுள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *