ஆதிதிராவிடர் மக்கள் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மகளிர் உரிமை தொகைக்கு பயன்படுத்த தி.மு.க. அரசு திட்டம்; டி ஜெயக்குமார் குற்றச்சாட்டு
சென்னையில் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடைபெற்ற வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு குறித்த எம் ஜி ஆர் மன்றம் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன் முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மக்களின் நலனை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 7 ஆயிரம் கோடி நிதியை தமிழக அரசு எடுத்திருப்பதாகவும், அந்த நிதியை கொண்டு மகளிர் உரிமைத் தொகை வழங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பதில் அளிக்க கோரி, தேசிய தாழ்த்தப்பட்ட நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பொருளாதார வல்லுனர்கள் அடங்கிய குழு, தமிழக அரசுக்கு இதுவரை கொடுத்த யோசனைகள் என்ன ? பொருளாதார வல்லுனர்கள் ஆலோசனை அளித்திருந்தால் எதற்காக சொத்து வரி, நிலவரி, குடிநீர் வரி, மின் கட்டணம் போன்றவற்றை உயர்த்த வேண்டிய அவசியம் என்ன? வரிகளை உயர்த்தி தான் ஆட்சி நடத்த வேண்டும் என்ற நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டு இருகிறது., இது தமிழக அரசுக்கு ஒரு வெட்கக்கேடான செயல்.
தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையால் தக்காளி முதல் பருப்பு வரை அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து உள்ளதால், நடுத்தர மக்கள் வாழ முடியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழக மக்களை குடிகார்களாக்குவதுதான் தி.மு.க. அரசின் லட்சியம், தமிழக அரசின் வருவாய் அதிகரித்திருப்பதன் மூலம் தமிழகத்தில் குடிகார்கள் எண்ணிக்கை அதிரித்திருப்பதே உதாரணம்.
பன்னீர் செல்வத்துக்கும், டிடிவி தினகரனுக்கும் பொழுது போகாத காரணத்தினால் தான் அவர்கள் இணைந்து செயல்படுவதாகவும், நாளை ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாகவும் கூறி உள்ளனர். அச்சாணி இல்லாத ஒரு கூட்டணி தான் பன்னீர்செல்வம் டி.டி.வி. தினகரன் அணி .
இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு ஆட்சி என்றால் அது தி.மு.க. ஆட்சி தான். ஊழல் பற்றி பேசுவதற்கு தி.மு.க.வுக்கு எவ்வித அருகதையும் இல்லை. அரசு நிகழ்ச்சிகளில் குடும்பத்தினரை பங்கேற்க செய்வது, தி.மு.க.வுக்கு கைவந்த கலை, கோயம்புத்தூரில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் முன்னிலைப்படுத்தி மாநாடு நடத்திய பெருமை தி.மு.க.வையே சாரும்.
இவ்வாறு டி,ஜெயக்குமார் கூறினார்.