ஆகஸ்டு 6 சேவை தொடக்கம்: சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல கோரிக்கை

தமிழகத்தின் தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயில் 8 மணி நேரத்தில்திருநெல்வேலி சென்றடையும்.
திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் சென்னைக்கு பிற்பகல் 2 மணியளவில் வந்தடையும். பின்னர் சென்னையிலிருந்து பிற்பகல் 3 மணியளவில் புறப்பட்டு இரவு 11 மணியளவில் திருநெல்வேலி சென்றடையும். இந்த ரெயில் திருச்சி, திண்டுக்கல், மதுரை ஆகிய 3 ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.
சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவையை ஆகஸ்ட் 6 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தென் மாவட்ட மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த ரெயில் முக்கியமாக கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கோயம்புத்தூர் சென்னை வந்தே பாரத் ரெயில் கோயம்புத்தூரில் இருந்து சேலம் வரை 160 கிலோமீட்டர் ஆகும். முதல் 50 கிலோ மீட்டரில் திருப்பூர் நிறுத்தம் உள்ளது இரண்டாவது ஐம்பது கிலோமீட்டரில் ஈரோடு நிறுத்தம் உள்ளது மூன்றாவது 60 கிலோமீட்டரில் சேலம் நிறுத்தம் உள்ளது கடைசி நிறுத்தம் சென்னை சென்ட்ரல். அது மாதிரி திருநெல்வேலி சென்னை வந்தே பாரத் ரெயிலில் திருநெல்வேலியை அடுத்து 60 கிலோ மீட்டரில் கோவில்பட்டி உள்ளது எனவே கண்டிப்பாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு நிறுத்தம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
