• February 7, 2025

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை; மு.க.ஸ்டாலின் அதிரடி பேட்டி

 அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை; மு.க.ஸ்டாலின் அதிரடி பேட்டி

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் பொன்முடியின் மகன் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2006-11ம் ஆண்டு காலகட்டத்தில் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அவர் அமைச்சராக இருந்தபோது விதிமுறைகளை மீறி செம்மண் எடுத்து அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2012ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் பூத்துறையில் உள்ள குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் செம்மண் எடுத்ததாக புகார் எழுந்தது.

அ.தி.மு.க. ஆட்சியில் 2012ல் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 11 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஆனால் அமலாக்கத்துறை சோதனைக்கான சரியான காரணம் இன்னும் தெரிய வரவில்லை.  வெளிநாடுகளில் முதலீடு தொடர்பாக அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணியின் ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஏற்கனவே அமலாக்கத்துறை முடக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மு.க.ஸ்டாலின் பேட்டி

பெங்களூருவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள்  கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

பெங்களூருவில் 2 நாட்கள் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியை அகற்ற எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியுள்ளோம். மத்திய பா.ஜ.க. ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டம் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

அமலாக்கத்துறை சோதனை குறித்து தி.மு.க. கவலைப்படவில்லை. பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்தை திசை திருப்பும் பா.ஜ.க.வின் தந்திரமே இந்த சோதனை. எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை முடக்கவே அமலாக்கத்துறையை வைத்து சோதனை நடத்துகிறது.. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் புனையப்பட்ட பொய் வழக்கில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

10 ஆண்டுக்கால அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றபோது, இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமலாக்கத்துறையின் சோதனையை சட்டரீதியாக அமைச்சர் பொன்முடி சந்திப்பார். வடமாநிலங்களில் பயன்படுத்திய உத்தியை பா.ஜ.க. தற்போது தமிழ்நாட்டில் பயன்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் நோக்கத்தைத் திசை திருப்புவதற்காக பா.ஜ.க. செய்யும் தந்திரம்தான் இந்த அமலாக்கத்துறை சோதனை.

ஆளுநர் மற்றும் அமலாக்கத்துறையினர் தி.மு.க.வின் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ.க. அரசால் அமலாக்கத்துறை ஏவப்பட்டுள்ளது. பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட எரிச்சலின் வெளிப்பாடுதான் அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்படும் சோதனை. தேர்தல் வேலை எங்களுக்கு சுலபமாக இருக்கும் என்று தான் நான் கருதுகிறேன். நாடாளுமன்ற தேர்தலில்  மக்கள் இதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். இந்தியாவை ஆபத்திலிருந்து காக்கவே எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறத.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *