செண்பகவல்லி அம்மன் கோவில் திடலில், அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும்; கோட்டாட்சியரிடம் இந்து ஆலயம் பாதுகாப்பு இயக்கம் மனு
கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியரை இந்து ஆலயம் பாதுகாப்பு இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பி.பிரமசிவம் மற்றும் நிர்வாகிகள் இன்று சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அரசியல் கட்சியினர் அல்லது ஜாதிய அமைப்பு இந்து அல்லாத மாற்று மதத்தினர் எவ்வித நிகழ்ச்சிகளும் நடத்துவதற்கு அனுமதி அளிப்பது இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஏற்கனவே அறிவித்து இருக்கிறார்.
கடந்த 14.8.21 அன்று வட்டாசியர் முன்னிலையில் கிழக்கு போலீஸ் நிலைய ஆய்வாளர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு இனிமேல் கோவில் பகுதியில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றி அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் , ஆர்ப்பாட்டம் போன்றவை நடத்த அனுமதி இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அன்று இந்து அமைப்புகளும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும் கையெழுத்திட்டு முடிக்கப்பட்டு மீண்டும் 14.8.22 அன்று சமாதான கூட்டத்தின் படி துணை கண்காணிப்பாளார் மற்றும் வட்டாட்சியர் முன்னிலையில் சாமாதான கூட்ட முடிவின்படி இனிவரும் காலங்களில் எவ்வித அரசியல் கட்சிகளுக்கும் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிப்பதில்லை எனவும் கொடிக்கம்பங்களை உடனடியாக அகற்றிடவும் மற்றும் சில கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று 17.7.23 தி.மு.க.வை சேர்ந்தவர்கள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு இந்து சமய அறநிலைய துறையில் அனுமதி பெறாமல் விதிகளை மீறி பொதுக்கூட்டம் நடத்த முற்படுவதால் சமாதான கூட்டத்தின் முடிவின்படி இந்த பொதுக்கூட்டம் நடத்துவதை தடுத்திட வேண்டும் என்று வேண்டுகிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.