கோவில்பட்டி அருகே ஓடும் ரெயிலில் மோதல் ; 2 பயணிகள் கீழே விழுந்து பலி
நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூருக்கு நேற்று சென்ற விரைவு ரெயிலின் பின்பக்க பொது பெட்டியில் கூடடம் அதிகம் இருந்தது.
திருநெல்வேலி யில் இருந்து ஈரோடு சென்ற தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா மருதமுத்தூரை சேர்ந்த முத்துக்குமார் (வயது 32), மற்றும் கோவில்பட்டி வ. உ. சி. நகர் மாறியப்பன் (48) ஆகியோர் ரெயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து கைகலப்பாக மாறியது. நள்ளிரவு மேல் 1 மணி அளவில் சாத்தூர் -துலுக்கப்பட்டி இடையே ரெயில் சென்றபோது, மோதலில் ஈடுபட்ட இருவரும் ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்து விட்டனர்.
இதை பார்த்த மற்ற பயணிகள் பதறிப்போனார்கள். உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனால் நடுவழியில் ரெயில் நின்றது. இதை தொடர்ந்து பயணிகள் கீழே இறங்கி இருவரையும் தேடினார். பலத்த காயத்துடன் இருவரும் தண்டவாளம் அருகே கிடந்தது கண்டுபிடிக்கப்பட்ட்து.
இதில் கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்து போனார். பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட முத்துக்குமார் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து போனார்.
இறந்து போன கோவில்பட்டி மாரியப்பன், கோயம்புத்தூருக்கு பெயிண்டிங் வேலைக்கு சென்றபோது மோதலில் பரிதாபமாக இறந்து போய் இருக்கிறார்.அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேற்படி சம்பவம் குறித்து தூத்துக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தூத்துக்குடி இருப்பு பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாகிருஷ்ணன் மற்றும் வட்ட காவல் ஆய்வாளர் அருள் ஜெயபால் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓடும் ரெயிலில் நடந்த மோதலில் 2 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.