அர்த்தமுள்ள, அவசியமான அறிவுரைகள்

 அர்த்தமுள்ள, அவசியமான அறிவுரைகள்

*ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திற்கு தேவையான பணத்தை முன்பே சேமிக்க வேண்டும் .

*வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், கணவன் / மனைவியை நோய்வாய்ப் படும்போதும், துரதிர்ஷ்டமான காலத்திலும் அறியலாம்.

*ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.

*அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.

*நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.

*உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தால் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.

*கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.

*கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.

*காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோபத்தை விட கொடிய நெருப்பு இல்லை, எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத்தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.

*பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.

*ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாயமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.

*யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டே சென்று விடுங்கள்.

*எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.

*அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திற்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரைதான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.

*சிங்கத்தின் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், ஆனால் நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்,

*வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிர்ஷ்டமான சம்பவங்கள் ஆகும்.

*அழகு, ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.

*கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.

*மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.

*பாம்பு, அரசன், புலி, கொட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது.

*கஞ்சனுக்கு பிச்சைக்காரன் எதிரி ஆவான், அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும். கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.

*வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது. பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.

*பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவர்த்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலையானது சிறிய உளியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.

*வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்த்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.

*உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம்.

*தேனீக்களை பார்த்து கற்று கொள்ளுங்கள், அவை கஷ்டப்பட்டு தேடிய தேனை தானே உண்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கி செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களை செய்யுங்கள்

தொகுப்பு: காசி விஸ்வநாதன்- திருநெல்வேலி

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *