`ஆதனின் பொம்மை’ நாவலுக்காக ஒரு வருடம் ஆய்வு செய்தேன்- எழுத்தாளர் உதயசங்கர்
![`ஆதனின் பொம்மை’ நாவலுக்காக ஒரு வருடம் ஆய்வு செய்தேன்- எழுத்தாளர் உதயசங்கர்](https://tn96news.com/wp-content/uploads/2023/06/Picture1-850x560.jpg)
கோவில்பட்டியை சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய `ஆதனின் பொம்மை’ என்ற இளையோர் நாவலுக்கு சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது அறிவிக்கபட்டு இருக்கிறது. விருது பெற்ற மகிழ்ச்சியில் இருந்த உதயசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஆதனின் பொம்மை நாவலுக்கு விருது கிடைத்து இருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நாவல் மிக முக்கியமான நாவல். தமிழர்களின் வரலாற்றை சொல்லக்கூடிய ஒரு நாவல். இப்போது இருக்கக்கூடிய சமகால இந்திய பின்புலத்தை வைத்து பார்க்கும் போது இந்த நாவலுக்கு கிடைத்துள்ள விருது என்பது தமிழர்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி வாழ்ந்தார்கள் என்பதை புனைவாக மறுபடியும் மீண்டும் எழுதி பார்த்திருக்கிறேன். சங்க கால பாடல்களில் சொல்லப்பட்டிருக்க கூடிய அத்தனை விஷயங்களும் உண்மை என்பதை நம்முடைய கீழடி , சிவகலை, ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/school-admission-1-1-1-1-1024x1024.jpg)
இதில் கிடைத்துள்ள பொருட்களின் மூலம் தமிழர்களின் பண்பாடு ,கல்வி, ஆண் பெண் சமத்துவம் என்பது தெரிய வந்துள்ளது. இதனை இளைய தலைமுறையினருக்கும் சொல்ல வேண்டும். கடந்த கால வரலாற்றை தெரியாதவர்கள் , எதிர்கால வரலாற்றை உருவாக்க முடியாது என்று டாக்டர் அம்பேத்கர் கூறியுள்ளார். கடந்த கால வரலாறு குறித்து இளைஞர்கள், குழந்தைகளிடம் சரியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக ஒரு வருடம் ஆய்வு செய்து இந்த நாவலை எழுதினேன்.
இந்த புனைவினை ஒரு துப்பறிவு புனைவாக அதாவது பாண்டஸி புனைவாக எழுதினேன். கீழடியில் இருந்து சிந்துவெளிக்கு சென்று வரக்கூடிய கால நிகழ்வாக எழுதினேன்,
பல வரலாற்று நூல்களை படித்த போது தென் பகுதி குறித்த வரலாறுகள் எதுவும் இல்லை, அது ஒரு ஆச்சரியமாக இருந்தது மட்டுமின்றி எல்லோருமே வட இந்திய குறித்த வரலாறுகள் மட்டுமே இருந்தது. அந்தக் கேள்விக்கான பதிலாக நம்ம சங்கப்பாடல்கள் மட்டும் தான் இருந்தது.
சங்கப் பாடல்களில் சொல்லப்பட்டவை உண்மையான வாழ்க்கை இல்லை,, அது அதீத புனைவு என்று பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்கள் அதை புறம் தள்ளி விட்டனர். அப்போதுதான் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனின் மிகப்பெரிய பணி கீழடியில் தொடங்கியது. அவர் வழியாக கண்டெடுத்த பொருட்கள், சங்க கால பாடலில் சொல்லப்பட்ட வாழ்க்கை ,உண்மையில் தமிழர்கள் வாழ்ந்த வாழ்க்கை என்பதும் சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியாக இங்கே கீழடியும், வைகைகரையும், ஆதிச்சநல்லூரும், பொருணை நாகரிகமும் இருந்தது என்பதும் தெரியவந்தது.
இது பெரியவர்களுக்கான செய்தி மட்டுமல்ல வருங்கால தலைமுறையினரும் தெரிந்து கொள்ளும் வகையில் செய்தியை கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது.
வருங்கால தலைமுறைதான் சமூகம் குறித்த சரியான பார்வையை வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு அது கிடைக்க வேண்டும். ஏற்கனவே தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் சனாதனம் என்கிற பெயர் மீண்டும் பழைய வரணசிர தர்மன் கொண்டு வருகிறேன் பெரிய முயற்சி நடந்து கொண்டிருக்கும் போது, தமிழர்கள் அப்படிப்பட்ட வரலாறு உடையவர்கள் அல்ல, அவர்களுக்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை கீழடி, ஆதிச்சநல்லூர் நிரூபிக்கிறது. இதைத்தான் சரியான பாதை என்று தேர்ந்தெடுக்கிறோம். அந்த பாதையைத்தான் நாம் இளைஞர்களுக்கு சொல்ல வேண்டும். நம்முடைய இனத்தின் வரலாறு அவர்கள் சரியாக புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற முடிவுகளை எதிர்காலத்தில் எடுக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.
கரிசல் வட்டார இலக்கியத்திற்கு தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கிய பங்கு உண்டு. அதற்கு இங்கிருந்த இடதுசாரிகள் இயக்கத்தை காரணம் என்று சொல்லுவேன். எழுத்தாளர் கி.ரா, கு.அழகிரிசாமி, பூமணி ஆகியோர் இடதுசாரிகள் இயக்கத்தில் இருந்து தான் எழுத வந்தார்கள் அது மிக முக்கியமான காரணம், எதிர்காலத்தில் இதுபோன்று எழுத்தாளர்கள் உருவாக வேண்டும் என்றால் கோவில்பட்டியில் கடைசில் வட்டார இலக்கிய ஆய்வு மையம் ஒன்று தொடங்க வேண்டும். அந்த ஆய்வு மையத்தில் ஆய்வு மாணவர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் பயிலரங்குகள் தொடங்கி , அனைத்து விதமான செயல்பாடுகள் நிகழும் கலாச்சார மையமாக மாற வேண்டும். அதற்கான ஏற்பாட்டை இந்த அரசாங்கம் செய்ய வேண்டும் என்பது எனது கோரிக்கையாக அரசுக்கு வைக்கிறேன்.
இவ்வாறு உதயசங்கர் கூறினார்
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)