கோவில்பட்டி, கயத்தாறில் அதிக அளவில் குழந்தை திருமணங்கள்; சமூக நலத்துறை அலுவலர் அதிர்ச்சி தகவல்
![கோவில்பட்டி, கயத்தாறில் அதிக அளவில் குழந்தை திருமணங்கள்; சமூக நலத்துறை அலுவலர் அதிர்ச்சி தகவல்](https://tn96news.com/wp-content/uploads/2023/06/th-1-5.jpeg)
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, யுனிசெப் நிறுவனம் மற்றும் தோழமை அமைப்பு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஒரு நாள் கருத்தரங்கம் தூத்துக்குடியில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் எஸ்.ரதிதேவி கலந்து கொண்டார். அவர் பேசுகையில் கூறியதாவது:-
18 வயதுக்கு குறைவான பெண்கள், 21 வயதுக்கு குறைவான ஆண்களுக்கு நடைபெறும் திருமணம் குழந்தை திருமணமாகும். குழந்தை திருமணங்களை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கிராம அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில் என குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்களில் பஞ்சாயத்து தலைவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
குழந்தை திருமணங்களை தடுக்கும் பணி அனைவரின் கூட்டு முயற்சியாகும். குழந்தை திருமணம் தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் இல்லை என கூறிவிட முடியாது. ஆனால் மற்ற மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் மிக குறைவாகவே உள்ளது. மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 19 குழந்தை திருமண நிகழ்வுகள் பதிவாகி உள்ளன. கடந்த ஒரு மாதத்தில் 2 சம்பவங்களே பதிவாகி உள்ளன. பெரும்பாலான குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/05/school-adm-kvp-5-1024x1024.png)
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் தான் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறுவதாக கண்டறியப்பட்டு, அந்த பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குழந்தை திருமணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தை திருமணங்களை தடுப்பதில் பத்திரிக்கையாளர்களின் பங்கு மிக முக்கியமானது. அனைவரும் ஒருங்கிணைந்து குழந்தை திருமணங்களை முழுமையாக தடுக்க முயற்சி செய்வோம்.
இவ்வாறு மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் எஸ்.ரதிதேவி பேசினார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)