பவளமலை முத்துகுமாரசுவாமி கோவில் சிறப்புகள்

 பவளமலை முத்துகுமாரசுவாமி கோவில் சிறப்புகள்

பச்சைமலை, பவளமலை எங்கள் நாடு, பரமேஸ்வரன் வாழும் மலை எங்கள் நாடு என்ற குற்றாலக் குறவஞ்சியில் ஒரு வரி இருக்கிறது.  அதில் குறிப்பிடப்படுவதும், முல்லைக்கு தேர்கொடுத்த பாரி ஆண்ட பகுதி என்ற பெருமை கொண்டதும் இந்த பவள மலையை. தூர்வார ரிஷி இத்தலத்து முருகனை வணங்கியுள்ளார். செட்டிநாட்டு பாடல் பெற்ற தலம். பழமையான இக்கோயிலில் விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர்.

திரி என்றால் மூன்று, சதம் என்றால் நூறு. திரிசதை என்றால் 300. முருகப் பெருமான் சூரனை சம்ஹாரம் செய்த பின், இந்திரன் முதலான தேவர்கள் கூடி, அவருக்கு செய்த அர்ச்சனையே திரிசதார்ச்சனை.

வெற்றியைப் புகழ்ந்து செய்ததால் இதற்கு சத்ரு சம்ஹார திரிசதார்ச்சனை என்று பெயர் வந்தது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து தொழிலும் சிவனைப் போன்று முருகனுக்கும் இருக்கிறது என்று போற்றப்படும் அர்ச்சனையாக விளங்குகிறது.

சூரசம்ஹாரம், வள்ளிதேவசேனா கல்யாணம், தந்தைக்கு உபதேசம், தேவர் குலம் காக்க, பிரம்ம சாஸ்திரம், பக்தர்களுக்கு #அனுக்கிரஹம் ஆகிய ஆறு காரணங்களுக்காக முருகனுக்கு ஆறுமுகம் ஏற்பட்டது.

அதிலிருந்து சரவணபவ என்ற ஆறெழுத்து மந்திரம் (க்ஷடாசரம்) உருவானது. கேடு மற்றும் இடையூறு நீங்க, ஒரு முகத்திற்கு 50 அர்ச்சனை வீதம் ஆறுமுகத்துக்கு 300 மந்திரங்கள் சொல்லப்படுகின்றன.

இதனால் திருமணத்தடை நீங்குவதுடன், குழந்தைப்பேறும், அரசியல் வெற்றி, தொழிலில் அபார வளர்ச்சி, எதிரிகளை முறியடித்தல் ஆகியவற்றுக்காகவும் இந்த அர்ச்சனையைச் செய்கின்றனர்.

பவளத்தின் நிறம் சிவப்பு, சிவப்பின் அதிபதி செவ்வாய். செவ்வாயின் அதிதேவதை சுப்பிரமணியர். பவளமலையில் திரிசதார்ச்சனை செய்வதன் மூலம் செவ்வாய் தோஷம் நீங்குகிறது.

செவ்வாய் மாலை ஐந்து மணிக்கு பருப்பு பாயாசம், உளுந்தவடை நைவேத்தியமாக படைக்கப்பட்டு திரிசதார்ச்சனை நடக்கும். இதில் பங்கேற்றால், நினைத்தது நடக்குமென்பது ஐதீகம்.

மூலவர் முத்துக்குமார சுவாமி பிரம்மசாரியாக எழுந்தருளியுள்ளார். வாயு மூலையில் வள்ளி தெய்வானைமுருகனைத் திருமணம் செய்து கொள்வதற்காக தவம் இருக்கின்றனர்.

அதாவது, திருமணத்துக்கு முந்தைய வள்ளி, தெய்வானையை இங்கு தரிசிக்கலாம். கைலாசநாதர், பெரியநாயகி அம்பாள் சந்நிதியும் உள்ளது. செவ்வாய் காலை சுவாமிக்கும், அம்பாளுக்கும் பால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

 முருகன் சந்நிதி அருகில் கைலாசநாதர் லிங்கம் அருகிலுள்ள வயல்வெளியில் புதைந்துஇருந்தது. விவசாயிகள் வயலை உழும் போது லிங்கம் கிடைத்தது. விவசாயிகள் இதனை எடுத்து வந்து கோயிலில் பூஜித்துவருவதால் அதை சுயம்புலிங்கமாக  கருதுகின்றனர்.

ஈரோட்டில் இருந்து 35கி.மீ தூரம் கோபிசெட்டிபாளையம். அங்கிருந்து 3கி.மீ சென்றால் முருகன் புதூர் பஸ் ஸ்டாப் அருகில் இக்கோயில் உள்ளது

தொகுப்பு:காசி விஸ்வநாதன்-திருநெல்வேலி-

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *