மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள்: கோவில்பட்டியில் 4 நாள் புகைப்பட கண்காட்சி தொடக்கம்
கோவில்பட்டி கம்மவார் டிரஸ்ட் கல்யாண மண்டபத்தில் ” மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச யோகா தினம், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை ” என்ற தலைப்பில் 4 நாள் புகைப்படக் கண்காட்சி இன்று தொடங்கியது.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகம் சார்பாக நடத்தப்படும் இந்த புகைப்பட கண்காட்சி 23-ந் தேதி நிறைவு பெறுகிறது. இக்கண்காட்சியை தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இலவசமாக பார்வையிடலாம்.
கண்காட்சி தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ. ராஜு , மத்திய மக்கள் தொடர்பக மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகங்களின் கூடுதல் தலைமை இயக்குனர் எம். அண்ணாதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் மாரிமுத்து, முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் துரைராஜ், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ செல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் தாஜு முனிஷா, மாவட்ட சமூக நல அலுவலக மைய நிர்வாகி செலின், கள விளம்பர அலுவலர் கோபகுமார் உதவி கள விளம்பர அலுவலர்கள் வேல்முருகன் மற்றும் ஜெயகணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் தபால்துறை, ஐ.சி.டி.எஸ்., காசநோய் தடுப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தனதினமும் காலை மாலை என இரு அமர்வுகள் நடைபெறும். ஒவ்வொரு அமர்விலும் பல்வேறு துறைசார் வல்லுனர்களின் கருத்துரை, கலைநிகழ்ச்சிகளும் மற்றும் பங்குபெறும் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கும் நிகழ்வும் இடம் பெறுகிறது.
யோகா, வங்கி சார் கல்வியறிவு, திறன் மேம்பாடு, சுய வேலைவாய்ப்பு, உணவுப்பாதுகாப்பு, வான்வெளி அறிவியல், சிறு குறுந்தொழில்கள், இந்திய ரெயில்வே, போஸ்ட் இந்தியா பேமென்ட் பேங்க் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.