கிராம நிர்வாக அதிகாரி கொலை வழக்கு விசாரணையை 2 மாதத்தில் முடிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் (வயது 55) என்பவர் கடந்த மாதம் அலுவலகத்திற்குள் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராம சுப்ரமணியன், மாரிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடைபெற்று வந்த நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் நியமனம் செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து சமீபத்தில், கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் கைதான ராமசுப்பிப்ரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொன்.காந்திமதிநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன், நீதிபதி ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் வழக்கு விசாரணை முறையாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி கொலை வழக்கில் விசாரணை அதிகாரி ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் ஸ்ரீவைகுண்டம் நீதித்துறை நீதிபதி இந்த வழக்கை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.