அ.தி.மு.க.வை ஒன்றிணைத்து தலைமை ஏற்பேன்; சசிகலா சொல்கிறார்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் கோவிலில் வி.கே.சசிகலா தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியார்கள் சந்திப்பில் சசிகலா கூறியதாவது:-
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு உரிமை உள்ளது. தீர்மானம் கொண்டு வரும்போது ஒவ்வொருவருக்கும் பேச உரிமை உள்ளது.
மக்கள் சார்ந்த பிரச்சினை என்பதால் சட்டப்பேரவையில் ஓ. பன்னீர்செல்வம் பேசியது எந்த தவறும் இல்லை. ஓ. பன்னீர்செல்வம் என்னை வந்து சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
எங்களுடைய கட்சிக்காரர்கள் இடையே வித்தியாசம் ஒன்றும் நாங்கள் பார்ப்பது கிடையாது. அ.தி.மு.க.வின் தோல்விக்கு பிரிந்து இருப்பது ஒன்று தான் முக்கியமான காரணம் ஆகும். அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்கு நான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளையும் ஒன்றிணைத்து தலைமை ஏற்பேன். எதிர்க்கட்சிகள் எப்படி நினைத்தாலும் அ.தி.மு.க., எம். ஜி.ஆர். போட்ட விதை. அதனை வளர்த்து வந்தவர் ஜெயலலிதா. அவர்கள் வழி வந்த நாங்கள் கட்சியை சிதறவிடாமல் ஒன்றிணைந்து பாராளுமன்றத் தேர்தலில் பெருவாரியான வாக்குகளில் வெற்றியை பெறுவோம்.
இவ்வாறு சசிகலா கூறினார்.