ஊர் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கடையம் பெரும்பத்து ஊராட்சி. இந்த பஞ்சாயத்தின் கீழ் வெய்காலிப்பட்டி, மேட்டூர், ஆசீர்வாதபுரம், கானாவூர் உள்ளிட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. இதில் மேட்டூரின் ஒரு பகுதியை பெயர் மாற்றம் செய்ய ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது.
மேட்டூர் பகுதிக்கு சபரிநகர், வெய்க்காலிப்பட்டி என்று வீட்டு தீர்வை ரசீது கொடுத்து வருகின்றனர்.
இதனை கண்டித்து மேட்டூர் பொதுமக்கள் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து தங்களது வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள், பொது இடங்களில் கருப்புக்கொடி கட்டினர்.
மேட்டூர் பரி. திரித்துவ ஆலயம் முன்பு திரண்டு கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர். 3-வது முறையாக நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு கையெழுத்திடாமல் புறக்கணித்தனர்.
மேலும் ஸ்டாலின் நகர் பகுதியில் அங்கேயே சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் தெய்வம் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தாசில்தார் ஆதிநாராயணன், கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை முருகன் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாவட்ட கலெக்டருக்கு இதுபற்றி எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.