அ.தி.மு.க. தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் தான் தேர்தல் கூட்டணி; டி.ஜெயக்குமார் உறுதி
சென்னை தலைமை கழகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.
கேள்வி : அதிமுக கூட்டணி தொடர்ந்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை பேசியுள்ளாரே
பதில் : கூட்டம் என்பது இரண்டுவகைப்படும்.ஒன்று கட்சியினரிடையே பேசுவது.அது இன்டோர் மீட்டிங்.மற்றொன்று பொது வெளியில் பேசுவது.பொது வெளியில் பேசும் கருத்துக்களுக்கு நாம் அது குறித்து பதில் சொல்லலாம். ஆனால் இன்டோர் மீட்டிங்கில் அவர்கள் கட்சியினரிடையே பேசியது குறித்து நான் பதில் சொல்வது உசிதமாக இருக்காது.ஆனால் எது எப்படி இருந்தாலும் சரி.அவர் உள்ளே என்ன பேசினார் என்பது எனக்குத் தெரியாது. பத்திரிக்கையில் வந்த செய்தியையும் முழுமையாக நம்ப முடியாது. எதுவாக இருந்தாலும் சரி,அவர் பேசியதன் அடிப்படையிலே ஏதுவாக இருந்தாலும் கட்சிதான் முடிவு செய்யும்.
கேள்வி : நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் கூட்டணியை யார் முடிவு செய்வது.
பதில் : தலைமைக்கழக நிர்வாகிகள்,இடைக்கால பொதுச்செயலாளர்,இடைக்கால பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளின் கருத்து கழகத்தின் தலைமையிலான கூட்டணிதான்.எனவே கழக தலைமையை ஏற்றுக்கொண்டு வருகின்ற கட்சியோடுதான் எங்களுடைய கூட்டணி அமையும்.
கேள்வி : அவர் பேச்சு என்பது தான் தலைமையில் முடிவு செய்வதுபோல உள்ளதே
பதில் : அவர் எங்குப் பேசினார்.அவர்களின் கட்சியினரை ஆனந்தபடுத்துவதற்கு,கட்சியை அவர்கள் வளர்ப்பதற்கு ஆயிரம் பேசலாம்.பொது வெளியில் பேசும்போதோ,அல்லது ஊடகங்களில் பேசும்போதுதான் நாங்கள் அது குறித்து கருத்துச் சொல்ல முடியும்.அவர்கள் கட்சியினரிடையே பேசியது குறித்து நாங்கள் பதில் சொல்ல முடியாது. எது எப்படி இருந்தாலும் சரி கட்சிதான் முடிவு செய்யும்.
கேள்வி : பொதுச்செயலாளர் தேர்தல் என்பது சிறுபிள்ளைத்தனமானது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாரே
பதில் : தேர்தல் பணி துவங்கிவிட்டது.ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வார்கள்.தேர்தல் பணி துவங்கியபின்னர் அது குறித்து நான் பேச விரும்பவில்லை.
கேள்வி: பொதுச்செயலாளர் தேர்தல் அவசரமாக நடக்கின்றதா
பதில் : சென்ற முறை ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் எப்போது நடைபெற்றது.சனிக்கிழமைதான் மனுக்களை வாங்கினோம்.எனவே அனைத்தும் முறைப்படி,சட்டப்படி நடைபெற்றுவருகிறது.
கேள்வி : தமிழகத்தில் பெரிய இயக்கம் .பாஜகவுடன் அதிமுக சகித்துக்கொண்டுபோகும் அவசியம் ஏன் வந்தது.
பதில் : நாங்கள் எங்கே சகித்துக்கொண்டு போகிறோம். என்பது உங்கள் பார்வைதான் அப்படி உள்ளது.தமிழக மக்களின் பார்வை அப்படி கிடையாது. எங்களைப் பொறுத்தவரையில் எங்களுக்கு என்று தனித்தன்மை உள்ளது.அந்த அடையாளம் என்பது புரட்சித்தலைவர்,புரட்சித்தலைவி அம்மா.அவர்களின் வழிகாட்டுதலோடு ,ஒரு தனித்தன்மையோடு கட்சி இயங்கும்போது குட்டக் குட்ட குனியும் ஆட்கள் நாங்கள் கிடையாது. எங்களை யாரும் குட்ட விடமாட்டோம். நாங்கள் குனியவும் மாட்டோம்.
கேள்வி : கூட்டணி குறித்து
பதில் : கூட்டணி என்பது கட்சி முடிவு எடுக்கும் விஷயம். எந்த சமயத்தில் யார் யார் என்றும் எங்கள் தலைமையில் எந்த கட்சிகள் இருக்கும் என்பதைக் கட்சி முடிவு செய்யும்.எடப்பாடியார் தெளிவாக சொல்லியுள்ளார்.எங்கள் தலைமையில்தான் கூட்டணி. எங்கள் தலைமையை ஏற்றுத்தான் வரவேண்டும். ஒரு ரெயில் பெட்டிக்கு இன்ஜின் எப்படியோ அதேபோல கழகம்தான் என்ஜின். பெட்டிகள் நிறையச் சேரும். திமுகபோன்று அந்த பெட்டிகள் கிடையாது.எங்களைப் பொறுத்தவரை மக்களையும்.,கட்சியினரையும் ஏற்றி சொல்லும் என்ஜின் நாங்கள்.பெட்டிகளைச் சேர்ப்பது,அந்த பெட்டிகளை நீக்குவது என்பது என்ஜினுக்குதான் தெரியும்.தேர்தல் காலத்தில் எந்தெந்த பெட்டியைச் சேர்ப்பது,எந்தெந்த பெட்டியை நீக்குவது என்பது பற்றி அப்போது முடிவு செய்வார்கள்.
கேள்வி : பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யவேண்டும் என்று வைத்தியலிங்கம்.கே.சி.பழனிசாமி ஆகியோர் வழக்குப் போட்டுள்ளார்களே
பதில் : இதற்குச் சட்ட ஆலோசனை குழு உள்ளது.அவர்கள் பதில் அளிப்பார்கள்.
கூட்டணி குறித்து எது எப்படி இருந்தாலும் கட்சிதான் முடிவு செய்யும்.
கேள்வி : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து ஆட்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறார்களே.ஆட்களை நீங்கள் இழுத்துவருகிறீர்கள் என்று சொல்லப்படுகிறதே
பதில் : நாங்கள் ஆட்களை இழுக்கவேண்டிய அவசியம் இல்லை. இப்போது அனைவருக்கும் தெரிகிறது.கழகம் மிகப்பெரிய இயக்கம் என்று.இன்று எவ்வளவு எழுச்சி என்று பார்த்தீர்களா.அந்த எழுச்சி இயற்கையாகத் தொண்டர்கள் மத்தியில் இருக்கும் சூழ்நிலையிலே இன்றைக்கு அமமுக என்ற கம்பெனி காலியாவிட்டது.இனிமேல் அங்கு இருப்பவர்கள் இங்கேதான் நேராக வருவார்கள். எழுச்சி இருக்கக்கூடிய இயக்கத்தில்தான் யாரும் வரக்கூடிய இயல்பு இருக்கும். வருபவர்களை அரவணைக்கக் கழகம் தயாராக உள்ளது.
கேள்வி : ஓ.பன்னீர்செல்வம்,சசிகலா சந்திப்பு விரைவில் நடக்கும் என்று தெரிவித்துள்ளாரே
பதில் : இது எவ்வளவு பெரிய சந்தர்ப்பவாதம்.எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.இது அரசியல் அயோக்கியத்தனம். வாழ்நாளில் ஓ.பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரையில் அம்மாவைத் தெரியாது. புரட்சித்தலைவரைத் தெரியாது. அவருக்கு முதல் முதலில் தெரிந்தவர் டி.டி.வி.தினகரன்தான்..டிடிவி மூலமாக சசிகலா.டிடிவி பெரியகுளம் தேர்தலில் நிற்கும்போது அப்போதுதான் இவர் அவரிடம் அறிமுகம் ஏற்பட்டு அதன் மூலம் சட்டமன்ற சீட்டுக்குப் பரிந்துரைக்கப்பட்டு அங்கு அவர் சட்டமன்ற உறுப்பினராக வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் முதலில் சந்தித்தது யாரை.புரட்சித்தலைவரைச் சந்தித்தாரா. அம்மாவைச் சந்தித்தாரா. டிடிவிதான் அவருக்கு குரு. சசிகலாதான் குரு.அந்த குருக்களை அவர் சென்று பார்ப்பது பெரிய விஷயம் கிடையாது.அந்த குடும்பம்தான் அம்மாவின் மரணத்திற்குக் காரணம் என்று ஓ.பன்னீர்செல்வம் சொன்னாரா இல்லையா.எனக்கு அம்மா மரணம் குறித்து சந்தேகம் உள்ளது.உரியவர்கள் தண்டிக்கப்படவேண்டும் அதனால் விசாரணை கமிஷன் வேண்டும் என்றார்.விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.ஆனால் அங்க சாட்சி சொல்வதற்குப் போகவே இல்லை. காலம் கடந்து போய்விட்டு எனக்கு அம்மா மரணம் குறித்து சந்தேகம் இல்லை என்று சொல்கிறார் எனக்கு சசிகலாவைத் தனிப்பட்ட முறையில் பிடிக்கும் என்றார்.முதலில் என்ன சொன்னார்.அந்த குடும்பத்தை நாம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றார்.ஆட்சி இருக்கும்போதே டிடிவியை சந்தித்துள்ளார்.
இது எப்படிப்பட்ட சந்தர்ப்பவாத,அயோக்கியத்தனம் என்று தெரிகிறதா,.அதனால்தான் ஒரு தொண்டன்கூட அவர் பக்கத்தில் இல்லை. நேற்று ஒன்று.இன்று ஒன்று,நாளைக்கு ஒன்று என்று பேசுவதை மக்கள் பார்க்கிறார்கள்.ஒரு நிலையான நிலைப்பாடு இல்லை.இதனை எப்படி தொண்டன் ஏற்றுக்கொள்வான்.அவர்களை இவர் சந்திப்பது பெரிய விஷயமல்ல.அவர்களால் முன்னேற்றம் அடைந்தவர் இவர்.அந்த விசுவாசத்தில் சென்று பார்க்கிறார்.
கேள்வி : திருச்சியில் நடைபெற்ற சம்பவம் குறித்து
பதில் : சட்டம் ஒழுங்கை பொறுத்தவரையில் தமிழகத்திலே சந்தி சிரிக்கின்ற அளவுக்கு கேடுகேட்டு மக்களுக்கு ஒரு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையும், ஆளும் கட்சியினரே சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அராஜகம்,அத்துமீறல்களைச் சர்வசாதாரணமாகச் செய்துவருகிறார்கள். பத்திரிக்கையில் வந்த செய்தியைச் சொல்கிறேன்.நேருவின் ஆட்கள் எம்பியின் வீட்டை சூறையாடினார்கள் என்று வந்தது. எம்பி சிவா இதனைப் பார்த்துவிட்டு மனம் நோந்துபோயுள்ளேன் என்கிறார். காயத்தை ஏற்படுத்திவிட்டு பென்சில் ஆயின்மென்டை திமுக போட்டுவருகிறது. சொந்த எம்பியின் வீட்டையே சூறையாடி கண்டத்திற்குரிய விஷயமாக உள்ளது.ஆளும் கட்சி எம்பிக்கே பாதுகாப்பு இல்லை.அவர்கள் கட்சியில் உள்ள கட்சியினருக்கே பாதுகாப்பு இல்லை. எப்படி மக்களுக்குப் பாதுகாப்பு இருக்கும்.இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்றால் விசாரணைக்கு அழைத்துச் செல்வது தவறு என்று காவல்நிலையத்தில் உள்ள சேர்களை அடித்து உடைத்து பெண் எஸ்ஐ மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.இது குறித்து உண்மையான சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்கவேண்டும். கட்சியில் தற்காலிக நீக்கம் செய்தால் சரியாய் போய்விடுமா.எல்லோரும் சொல்கிறார்கள் நேருவின் ஆட்கள் என்று.அப்படி என்றால் உள்ளாட்சித்துறை அமைச்சர் நேரு மீது முதல் தகவல் அறிக்கையைப் போட்டீர்களா.அமைச்சரைக் கைது செய்தீர்களா. நீங்கள் எதுவேண்டுமானாலும் செய்யலாம்.உங்களுக்குச் சட்டம் கிடையாது. ஆனால் எங்களுக்குச் சட்டம் உண்டு.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.