சபாநாயகராக இருந்தபோது முதல் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டேனா? வைத்திலிங்கம் குற்றச்சாட்டுக்கு டி.ஜெயக்குமார் அதிரடி பதில்
சென்னையில் அதிமுக தலைமைக்கழகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார்.
அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்வியகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு.
கேள்வி : பா.ஜ.க.விலிருந்து நிர்வாகிகளை அழைத்துவந்து கட்சியை வளர்க்கவேண்டிய நிலை அதிமுகவுக்கு வந்துள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளாரே
பதில் : கல் வீசினால் உடைய அதிமுக கண்ணாடி இல்லை. அதிமுக என்பது கடல். கடலில் கல் வீசினால் கல் தான் காணாமல் போகும். சமுத்திரம் பெரிய அளவிற்கு அங்கேதான் இருக்கும்.அலைகள் அடித்துக்கொண்டுதான் இருக்கும். எடப்பாடியார் தலைமையில் இன்றைக்குக் கட்சி எழுச்சியோடு இருக்கின்ற நிலையில் அவர்கள் விருப்பப்பட்டு சேருகிறார்கள். விருப்பபட்டு சேர்வதை அரசியல் ரீதியாக ஏற்கும் பக்குவம் எல்லோருக்கும் இருக்கவேண்டும். நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.அது அண்ணாமலைக்கும் இருக்கவேண்டும். திமுகவிலிருந்து வந்து சேர்வார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்.அதன் படி தற்போது திமுகவிலிருந்து ஒன்றிய தலைவர் ஒருவர் கழகத்தில் இணைந்துள்ளார்.இதுபோல அனைத்து கட்சியிலிருந்தும் வருகிறார்கள் என்றால் கட்சியைப் பொறுத்தவரையில் எழுச்சி,வலிமை பலம் வாய்ந்து ஒரு பெரிய அசூர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையிலே அனைவரும் வந்து சேர்கிறார்கள்.இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கக்கூடாது.எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் பெருந்தன்மையோடு இருப்பதுதான் நல்ல விஷயம்.
கேள்வி : வைத்தியலிங்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளாரே
பதில் :அவர் அறிக்கையில் இரண்டு விஷயங்களைக் குறிப்பிடுகிறார். நான் பேரவைத் தலைவராக இருக்கும்போது முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு அந்த அடிப்படையில் என்னுடைய பதவியை எடுத்ததுபோல தெரிவித்துள்ளார்.அது எவ்வளவு அப்பட்டமான பொய். அப்படி இருந்தால் எனக்கு அம்மா 2016 ல் சீட் அளிப்பார்களா. 2016 ல் ராயபுரத்தில் என்னை நிற்கவைத்து வெற்றிபெறச் செய்து அமைச்சராக்கினார் அம்மா.அதே நேரத்தில் என்னுடைய மகனை அழைத்து நாடாளுமன்றத்திற்கு நிற்கவைத்து வெற்றி பெறச் செய்கிறார்.அதன்பிறகு அவர் மகனுக்கு சீட் அளித்த காரணத்தினால் இனி ஜெயக்குமாருக்கு அரசியல் வாழ்க்கை கிடையாது என்று சொன்னார்கள்.அதற்கும் அம்மா புற்றுப்புள்ளி வைக்கிறார்கள்.உடனடியாக எனக்கு சீட் அளித்து அமைச்சராகப் பொறுப்பு வழங்குகிறார்.என்னை அமைச்சராக்கியது அம்மாதான்.இதுகூட தெரியாமல் அரைவேட்காட்டுதனமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.எதிர்த்தால் அரசியல் ரீதியாக எதிர்க்கவேண்டும்.ரகசியங்களால் பதவி வகித்தார் என்கிறார்.என்ன ரகசியம் அது.சிதம்பர ரகசியமா.தனிப்பட்ட முறையில் தாக்கி பேசக்கூடாது. எனது நண்பர் இப்படி தரம் தாழ்ந்து போய்விட்டாரே என்று செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்தாயடா கண்ண என்பதுபோல அவர் வஞ்சத்தில் வீழ்ந்துவிட்டரே என்று நினைக்கிறேன்.அவர் அந்த வஞ்சத்திலிருந்து மீண்டு இங்கு வந்தால் நன்றாக இருக்கும்.
கேள்வி : கோவில்பட்டியில் எடப்பாடியார் உருவத்தை பாஜகவினர் எரித்துள்ளார்களே.
பதில் : இதனை அந்த கட்சியின் தலைவர் கட்டுப்படுத்தவேண்டும் இல்லையா. எங்கள் கட்சியில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளார்கள்.அவர்கள் கிளந்தெழுத்தால் என்ன ஆவது..எனவே இதுபோன்று செய்யக்கூடாது.இது கண்டனத்திற்குரிய விஷயம். இதனைக் கண்டித்து அவர்களைக் கட்சியிலிருந்து நீக்குவதுதான் நல்ல விஷயம். எங்கள் கட்சியிலிருந்து தொண்டர்கள் கிழர்ந்தெழுந்தால் இதனை யாராலும் ஈடுகட்ட முடியாது.
கேள்வி நான் ஒரு மேலாளர் போல நடந்துகொள்ள முடியாது என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் தன்னை அண்ணாமலை ஒப்பிட்டுக்கொள்கிறாரே
பதில் அவர் எப்படி தலைவரானார் என்பது குறித்து நான் போகவிரும்பவில்லை.அவர் எதை வேண்டுமானாலும் பேசட்டும்.ஆனால் அம்மா போல என்று சொல்லாதீர்கள்.இதனைச் சொல்வதற்கு இந்தியாவில் யாரும் இனி பிறக்கப்போவதில்லை.அம்மா போல ஒரு லீடர் தமிழகத்தில் இனி பிறக்கப்போவதில்லை.அந்த அளவுக்கு ஒரு ஆற்றல்மிக்க நிர்வாகத் திறமை,அரவணைத்துசெல்கின்ற மாண்பு,அன்பு காட்டுபவர்கள் மீது மென்மையான கரங்களும்,சட்டத்தைக் கையில் எடுப்பவர்களுக்கு இரும்புக் கரத்தையும் கொண்ட ஒரு சொந்தக்காரர்.இந்தியாவில் இருக்கக்கூடிய,உலகம் முழுவதும் உள்ளவர்களால் போற்றக்கூடிய ஒரு மாபெரும் தலைவர். செஞ்சிகோட்டை ஏறுபவர்கள் எல்லாம் ராஜதேசிங்கு கிடையாது. மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் கிடையாது.
கேள்வி : இரண்டு கட்சி தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கால் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று எடுத்துக்கொள்ளலாமா
பதில் : ஒரு கட்சியில் உள்ளவர்களுக்கு ஒரு அபிலாசைகள்,உணர்ச்சிகள் இருக்கும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது தலைவரின் பண்பு.தலைவர்களே உணர்ச்சிகளைத் தூண்டக்கூடாது. கூட்டணி தர்மம் என்ற அடிப்படையில் பாஜக.வை சேர்ந்தவர்கள் இதனை உணர்ந்து நடவடிக்கை எடுத்தால் நல்லது.
கேள்வி : பாஜ.க.விலிருந்து வந்து கட்சியில் இருக்கிறார்கள்.அவர்கள் கூட்டணிக் கட்சியில் உள்ள தலைவர்கள் குறித்து அறிக்கையையை வெளியிடுகிறார்களே.இது கூட்டணி தர்மமாகுமா.
பதில் : கூட்டணியைப் பொறுத்தவரையில் எடப்பாடியார் சொல்லிவிட்டார்.அண்ணாமலையும் சொல்லிவிட்டார். 2024 பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடரும்.அதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை.அதே நேரத்தில் சிலர் அவர்களுடைய அனுபவங்களைச் சொல்கிறார்கள். தலைவர்கள் அளவில் கருத்துக்கள் சொல்லும்போது கண்டிப்பாக அதற்கு எதிர்வினையாற்றுவோம்.அட்ரஸ் இல்லாதவர்கள் சொல்லும் கருத்துக்கு நான் விலாசம் அளிக்க விரும்பவில்லை.அவர்களை நான் அங்கீகாரம் செய்யவிரும்பவில்லை.அவர்கள் கருத்துக்குப் பதில் கருத்துச் சொல்லவேண்டிய அவசியம் கிடையாது.
இவ்வாறு டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.