• November 15, 2024

`அண்ணாமலை, இன்னும் அரசியலில் பக்குவப்படவில்லை’-கடம்பூர் ராஜூ

 `அண்ணாமலை, இன்னும் அரசியலில் பக்குவப்படவில்லை’-கடம்பூர் ராஜூ

பா.ஜனதா நிர்வாகிகள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணி தர்மத்தினை மீறி செயல்படுவதாக கூறி எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை பா.ஜ.க.வினர் 4 பேர் கோவில்பட்டியில் நேற்று  எரித்தனர்.

இந்நிலையில் கடம்பூரில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:

பா.ஜ.க. ஐ.டி. விங் நிர்வாகி அ.தி.மு.க.வில் இணைந்தது கண்டு அண்ணாமலை மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் ஏன் பதற்றப்பட வேண்டும் என்பது எங்களுக்கு புரியாத புதிராக உள்ளது. ஒரு கட்சியில் இருந்து பிரிந்து மற்ற கட்சிகளுக்கு செல்வது சகஜமான ஒன்று.

அ.தி.மு.க.வில் இருந்து பலரும் பா.ஜ.க.விற்கு சென்று உள்ளனர். அ.தி.மு.க.விற்கு பதில் தி.மு.க.வில் நிர்மல் குமார் இணைந்து இருந்தால் என்ன செய்திருப்பார்கள். கோவில்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்தவர் ஒரு விளம்பர விரும்பி.

இந்த சம்பவத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவர் நடவடிக்கை எடுப்பது குறித்து பொறுத்து இருந்து பார்க்கலாம்.

அண்ணாமலை என்ன எதிர்வினை ஆற்றுவார் என்று பார்ப்போம். ஒன்றிய அரசு என்று கூறும் தி.மு.க.விற்கு எதிராக பேசி தான் வருகிறார் தவிர எந்த எதிர்வினையும் அவர் ஆற்றவில்லை. அ.தி.மு.க. வரலாறு அண்ணாமலைக்கு தெரியாது. அவர் இன்னும் அரசியலில் பக்குவப்படவில்லை. தானாக விரும்பி வந்து கட்சியில் சேருபவர்களை எந்த அரசியல் கட்சியினரும் சேர்த்துக் கொள்வார்கள்.

இந்த அரசியல் அரிச்சுவடி கூட அண்ணாமலைக்கு தெரியவில்லை. எங்களுடன் பா.ஜ.க. கூட்டணி சேர்ந்த காரணத்தினால் தான் இன்றைக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் அந்த கட்சிக்கு கிடைத்துள்ளனர். 1996-ம் ஆண்டு பா.ஜ.க. அரசு மத்தியில் அமைவதற்கு அ.தி.மு.க. தான் உறுதுணையாக இருந்தது. அ.தி.மு.க.வை முந்த எந்த இயக்கமும் தமிழகத்தில் இல்லை. தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது.

இவ்வாறு கடம்பூர் ராஜூ கூறினார்.

இந்த் நிலையில் பா.ஜனதா வடக்கு மாவட்ட  பிற்படுத்தப்பட்டோர் பிரிவு அணியின் துணை தலைவர் கோமதி, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *