ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி; 34 ஆண்டுக்கு பிறகு மீண்டும் சட்டப்பேரவைக்குள் நுழைகிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
238 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. 77 வேட்பாளர்கள் போட்டியில் இருந்ததால் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்களில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் ஓட்டுச்சாவடிகளில் வாக்களித்தனர். இது 74.79 சதவீதமாகும்.
இதுதவிர வாக்குப்பதிவுக்கு முன்பே 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டுகள் பதிவு செய்தனர்.
இதையடுத்து இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. மொத்தம் 15 சுற்றுகளாக எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையில் இதுவரை 15 சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளது.
முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வந்தார்.ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவிலும் அதிமுக வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளர் 5 ஆயிரம் வாக்குகள் வரை அதிகம் பெற்று வந்தார்.
தற்போது கிட்டத்தட்ட 14 சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இளங்கோவன் 1,04,907 வாக்குகள் பெற்று வெற்றி முகத்தில் உள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் தென்னரசு 41,666 வாக்குகள் பெற்றுஉள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 7984 வாக்குகளும் 1115 வாக்குகளும் பெற்று இருக்கிறார்கள்.
இன்னும் ஒரு சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டபிறகு தேர்தல் அதிகாரிகள் சரி பார்ப்புக்கு பிறகு முடிவுகள் விவரம் அறிவிக்கப்படும். பின்னர் காங்கிரஸ் வேட்பாளருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்படும்.
34 ஆண்டுக்கு பிறகு
ஈரோடு வெங்கடப்ப கிருஷ்ணசாமி சம்பத் இளங்கோவன் என்பதன் சுருக்கமே ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். தந்தை பெரியாரின் பேரனும், திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கும்போது அண்ணாவுக்கு பக்கபலமாக இருந்த சொல்லின் செல்வர் என அழைக்கப்பட்ட ஈ.வி.கே.சம்பத்தின் மூத்த மகன் தான் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.
சென்னை மாநில கல்லூரியில் பொருளாதாரம் பயின்ற இளங்கோவன், இளைஞர் காங்கிரசில் தீவிர செயற்பாட்டளாராக இருந்தார். 1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு, முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார்.
இரண்டு முறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், ஒரு முறை செயல் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். 2004-ம் ஆண்டு கோபிசெட்டிப்பாளையம் மக்களவை தொகுதி எம்.பியாக ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.
மன்மோகன்சிங் அமைச்சரவையில், மத்திய ஜவுளி மற்றும் வர்த்தகத்துறை மந்திரியாக இருந்தார். அப்போது பாஜக அரசு கொண்டு வந்த ஜவுளி தொழில்துறை மீதான சென்வாட் வரியை நீக்கி, ஜவுளி தொழில் திறம்பட செயல்பட வழிவகுத்தார். 2009 மற்றும் 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
பிறகு 2021 சட்டப்பேரவை தேர்தலில், ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா, ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். ஜனவரி 4-ம் தேதி திருமகன் ஈவேரா மறைந்ததால், இடைத்தேர்தலில் அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார்.
இதன்மூலம் 34 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் நுழைகிறார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.