பணத்தால் எதுவும் சாதிக்க முடியாது, தி.மு.க. மீதான அதிருப்தி எங்களுக்கு வாக்குகளாக மாறும்-டி.ஜெயக்குமார்
![பணத்தால் எதுவும் சாதிக்க முடியாது, தி.மு.க. மீதான அதிருப்தி எங்களுக்கு வாக்குகளாக மாறும்-டி.ஜெயக்குமார்](https://tn96news.com/wp-content/uploads/2023/02/download-8.jpg)
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலில் திமுகவினர் செய்துவரும் முறைகேடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
அமைச்சர் செந்தில் பாலாஜி ரூம் போட்டுச் சிந்திப்பதில் கில்லாடி.அவரைப்போல ரூம் போட்டு புதிது புதியதாக யுக்திகளைச் சிந்திக்கின்ற ஒரு அமைச்சர் உலகத்திலேயே எங்கும் இருக்க முடியாது.அதுபோல் ரூம் போட்டு ஊழல் செய்வதிலும் சரி,விஞ்ஞான முறையில் சிந்திப்பதற்கும் சரி,நவீன முறையில் சிந்திப்பதற்கும் சரி நம்முடைய சாராய அமைச்சருக்கு கைவந்த கலை.
இப்படி இருக்கும் சாராய அமைச்சர் தற்போது லேட்டஸ்டாக திருமங்கலம் பார்முலாவில்கூட இதனைச் சேர்க்கவில்லை.அங்கு 40 டாஸ்மார்க் கடைகள் இருக்கும்.அந்த கடைகளில் வசூலாகும் தொகைகளை அங்கு பணிபுரியும் பணியாளர் அன்றைக்கே வங்கிக்குச் செலுத்தவேண்டும்.
தேர்தல் ஆணையத்தில் அண்டா,குண்டா,மளிகை பொருட்கள்,பணம் உள்ளிட்ட அனைத்தும் அளிக்கப்பட்டுவருகிறது என்று புகார் அளித்துள்ளோம்.அவர்கள் இதுபோன்று எது கொடுத்தாலும் அதிமுக தான் வெற்றிபெறப்போகிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பணத்தால் எதுவும் சாதிக்க முடியாது.ஆனால் இவர்கள் ( திமுகவினர்) பணம் பாதாளம் வரை பாயும் என்று நினைக்கிறார்கள்.ஆனால் பணம் பாதாளம் வரை பாய்ந்தாலும் பணத்தால் நிச்சயமாகக் காரியம் சாதிக்க முடியாது.
பணம் உள்ளிட்ட பொருட்கள் அனைத்து பகுதிகளிலிருந்தும் வரும்.அதனைத் தடுக்கும் வாய்ப்புகள் இருக்கலாம்.இதுபோன்ற நிலையில் அங்கிருக்கும் டாஸ்மார்க் கடைகளில் அன்றாடம் வரும் வருவாயை சாராய அமைச்சரின் ஆள் வந்து வசூல் செய்துகொண்டு போவார்.முறையாக டாஸ்மார்க் நிறுவனத்திற்குப் போகவேண்டும். இந்த பணத்தைச் சாராய அமைச்சரின் ஆள் வந்து வாங்கி சென்று விடுவார்.
.சாராய அமைச்சர் அந்த தொகுதிக்கு வெளியே உள்ள வங்கிக்கு அனுப்பிவிடுகிறார்.அப்படி என்றால் பணம் சர்வ சாதாரணமாக உள்ளே நுழையும்.தேர்தல் ஆணையத்தின் கண்ணிலேயே மண்ணை தூவிவிட்டு, கில்லாடி தனமான பணியைச் செய்துவருகிறார்கள்.இதனை நாங்கள் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகாராக அளித்துள்ளோம்.
நீங்களே வந்து கண்காணியுங்கள் என்று தெரிவித்துள்ளோம்.இதற்கு முன்னர் எப்படிப் பணம் கட்டினார்கள்.தேர்தல் தேதி அறிவித்த பின்னர் எப்படிப் பணம் கட்டியுள்ளார்கள் என்ற வேறுபாட்டை எடுங்கள் என்று தெரிவித்துள்ளோம்.வகையாக மாட்டிக்கொள்வார்.அந்த அளவுக்குத் தவறு செய்துள்ளார்கள் என்று சொன்னவுடன் அதனை எல்லாம் கவனத்தில் வைத்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு.
கேள்வி : மொத்தம் எத்தனை கடைகள் உள்ளது.
பதில் : மொத்த 34 கடைகள் இருக்கும் என்று நினைக்கின்றேன்.
கேள்வி: மார்ச் மாதம் ஒரு விடியல் நிகழும்.ஒபிஎஸ் தலைமையில் கட்சி உருவாகும் என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிவருகிறார்களே
பதில் : கூடுவார் கூட சேர்ந்தால் அந்த காற்றுதான் அடிக்கும் என்பார்கள். நாங்கள் விடியா அரசு என்று சொல்கிறோம்.அவர் விடியல் என்கிறார்.விடியல் என்றால் திமுகவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்.அவரை பொறுத்தவரையில் ( ஓபிஎஸ்) ஆட்டக் களத்திலும் இல்லை. நாக் அவுட் ஆன அவரைப்பற்றிப் பேசவேண்டாம். ஆட்டக் களத்தில் இல்லாதவர் குறித்துப் பேசாதீர்கள்.
கேள்வி : அமைச்சர்கள் பரோட்டா,டீ போடுவது போன்ற செயல்களைச் செய்துவருகிறார்களே
பதில் : ஏதுவாக இருந்தாலும் எல்லை என்று ஒன்று உள்ளது. வீட்டில் சென்று பாத்திரம் கழுவும் வேலையைத்தான் திமுக செய்யவில்லை. அமைச்சர்கள் இப்படிச் செய்யலாமா. அமைச்சர் மஸ்தான் அழகாகச் சப்பாத்தி சுடுகிறார்.இப்படி சப்பாத்தி சுடுவதும்,பரோட்டா சுடுவதும்,டீ போடுவதும் பஜ்ஜி சுடுவதும்,ஆம்லைட் போடுவதும்,ஒட்டகத்தில் போவது போன்ற அமைச்சர்கள் அமைந்துள்ளார்கள் என்பதை கோமாளித்தனமாக விஷயமாகத்தான் பார்க்க முடிகிறது.
கேள்வி : கடந்த கால அமைச்சரையும் சாராய அமைச்சர் என்ற பொருள் பட சொல்லாமா
பதில் : அவர் ( செந்தில் பாலாஜி) ரூம் போட்டுச் சிந்திப்பவர்.எங்கள் அமைச்சர் சட்ட விரோதமாக எதுவும் செய்யவில்லை. சட்டவிரோதமாக பார்களை கட்சியினருக்கு அளிப்பது, பார்களை 24 மணி நேரம் திறந்துவைக்கும் வேலையைச் செய்வதுபோன்ற செயல்களால்தானே விமர்சனம் வருகிறது. நாங்கள் படிப்படியாக மதுக்கடைகளைக் குறைத்தோம்.நேரத்தைக் குறைத்தோம்.அதுபோன்று விதிமுறைப்படி இருந்தால் யாரும் விமர்ச்சனம் செய்ய மாட்டார்கள்.தவறு செய்பவர்கள் மீது விமர்சனம் வரத்தான் செய்யும்.நீங்கள்தான் சாராய வியாபாரி என்று ஒட்டுமொத்தமாக முத்திரை குத்தியாகிவிட்டது.தமிழகத்தில் குழந்தையைக் கேட்டாலும் சொல்வார்கள்.யார் சாராய வியாபாரி என்று தெரியும்.
கேள்வி : பணப் பட்டுவாடா குறித்துச் சொன்னீர்கள்.அதிமுக எதுவும் பணம் தரவில்லையா.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/02/97c00838-0364-48d9-8ede-e5cc78905eba-3-1024x443.jpg)
பதில் : எங்களைப் பொறுத்தவரையில் பணநாயகத்தை விட ஜனநாயகத்தை நம்புகிறோம்.எங்களுக்கு பணநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை.எங்களைப் பொறுத்தவரையில் பணத்தின் மீது நம்பிக்கை இல்லை.எங்களின் சாதனைகள் மீது நம்பிக்கை உண்டு.அம்மாவின் சாதனை மீது நம்பிக்கை உண்டு.எடப்பாடியாரின் நான்கு ஆண்டுக்கால ஆட்சி மீது நம்பிக்கை உண்டு. திமுக மீதான அதிருப்தி எங்களுக்கு வாக்குகளாக மாறும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
கேள்வி : முதலமைச்சர் தொகுதியில் 9 கிலோ தங்கம் கொள்ளை போயியுள்ளது.
பதில் : காவல்துறை ஆட்சி மாறியதும் வேறு எங்கும் போகவில்லை.வேறு மாநிலத்திலிருந்து யாரும் வரவில்லை. அப்போது இருந்த காவல்துறைதான் இப்போதும் வேலை செய்கிறார்கள். எங்கள் ஆட்சியில் போலீஸ் மூளை செயல்பட்டது. ஆனால் இந்த ஆட்சியில் போலீஸ் மூளை செயல்படவில்லை. ஒரே போலீஸ்தான்.ஆட்சிதான் மாறியுள்ளது.எங்கள் ஆட்சியில் ஸ்காட்லாண்டு காவல்துறைக்கு இணையாக மிடுக்காக,கவுரவமாக இருந்தோம். அம்மா ஆட்சியில் காக்கி சட்டை போடுவது கவுரவம் என்பார்கள். ஆனால் இன்றைக்கு காவல்துறையை கேட்டுபாருங்கள்.ஏன் வேலைக்குப் போகிறோம் என்ற நிலைமைதான் உள்ளது என்று சொல்வார்கள்.
கேள்வி : அண்ணாமலை பிரச்சாரம் செய்துள்ளாரே.எந்த அளவுக்கு அது உங்களுக்குப் பயனுள்ளதாக உள்ளது.
பதில் : அவர் தோழமை கட்சி என்ற அடிப்படையில் பிரச்சாரம் செய்துள்ளார்.அதனால் எங்களுடைய கூட்டணி கண்டிப்பாக வெற்றிபெறும்.இதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது.
கேள்வி : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விஸ்வரூபம் படத்தின்போது அமைதியாக இருந்தார் என்று கமல் பேசியுள்ளாரே.
பதில் : கமல் பேசியுள்ளார்.கனிமொழி வேறு விதமாகப் பேசியுள்ளார்.ஒரு படத்தில் ஒரு சமூகத்தை இழிவுப்படுத்தக்கூடாது.ஒரு சமூகம் இழிவுபடுத்தும்போது இஸ்லாமிய அமைப்புகள் அம்மாவிடம் புகார் தெரிவித்தனர். சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று தெரிவித்தனர். மத உணர்வைப் புண்படுத்தி,உங்களுக்கு பண உணர்வுதான் முக்கியம் என்றால் அதனை எப்படி முதலமைச்சர் எடுத்துக்கொள்ள முடியும். உடனடியாக காட்சிகளை நீக்கச் சொன்னார்கள்.காட்சிகள் நீக்கப்பட்ட பிறகுதான் படத்தை ரிலீஸ் செய்தார்கள்.
கமல் இப்போது பேசுகிறாரே.அம்மா இருக்கும்போது பேசவேண்டியதுதானே. ஏன் அப்போது வாய் மூடி இருந்தீர்கள். வாயில் இப்போது அமைச்சர்கள் சுட்ட போண்டாவை வாயில் வைத்திருந்தாரா.இறந்தவர்கள் குறித்து மதிப்பு குறைவாகப் பேசக்கூடாது. அன்றைக்கு இருந்த நிலை அப்படி.ஒரு சமூகத்தினர் மத உணர்வைப் பாதிக்காத அளவுக்கு இருந்த காட்சிகள் நீக்கப்பட்ட பின்னர் படம் ரிலீஸ் ஆனாது.இதுதான் அப்போது நடைபெற்றது.உண்மையைத் திரித்துப் பேசக்கூடாது. கனிமொழி ஒரு தொகுதிக்குள் வந்துவிட்டுப் போக முடியுமா என்று பேசுகிறார்.இது ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயலா. கனிமொழி எப்போது சொர்ணாக்காவாக மாறினார்கள் என்று தெரியவில்லை.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/02/bf9ec756-76e5-4497-b235-413f0178c160-8-1024x768.jpg)
கேள்வி : மீசை வைத்தவர்கள் எல்லாம் ஆண்களா என்று பேசியுள்ளாரே
பதில் : வாக்காளர்களை ஜனநாயக முறையில் சந்திப்பதை விட்டுவிட்டு,ஜனநாயகத்திற்கு விரோதமாக அவர்களைக் கொட்டகையில் ஆடு,மாடு போல அடைத்துவைத்துவிட்டு அவர்களுக்கு வேண்டியதைப் பணத்தையும்,அதிகாரத்தையும் வைத்து நீங்கள் செய்தால் எப்படி.அவர்களைத் திறந்துவிடுங்கள் என்று சவால் விட்டுச் சொல்லக்கூடிய விஷயம் அது.அதற்கு நீங்கள் சவால் விட்டுப் பேசுங்கள்.அதனை விட்டு நீங்கள் தொகுதியை விட்டுப் போக முடியுமா.எங்கள் கட்சியில் ஜனநாயக ரீதியில் உள்ள தொண்டர்களும் உள்ளார்கள்.ஜனநாயகத்தை மீறும் தொண்டர்களும் உள்ளார்கள் என்றால்,ஆளை வைத்து கனிமொழி அடிப்பார்களா. கருணாநிதி காலத்திலிருந்து எத்தனையோ உருட்டல்,மிரட்டல்களைச் சந்தித்த இயக்கம்தான் எங்கள் இயக்கம்.இந்த பூச்சாண்டிக்கு,சொர்ணாக்கா மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சாது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்/
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)