ஓ. பன்னீர்செல்வத்துக்கு டி. ஜெயக்குமார் சவால் ; ஓ.பி.எஸ்.முன்னேற்றக் கழகம் என்று ஆரம்பித்து பலத்தை காண்பியுங்கள்
சென்னை பெசன்ட் நகரில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு :-
கேள்வி : ஓ.பன்னீர்செல்வம் துணிவிருந்தால் எடப்பாடி கே.பழனிசாமி தனிக் கட்சி ஆரம்பிக்கட்டும் பார்க்கலாம் என்று குறிப்பிட்டுள்ளாரே
பதில் : முதலில் அந்த கூட்டத்தை ஒரு நிறுவனத்தின் கூட்டமாகத்தான் பார்க்க முடியும். அதனைக் கட்சியின் கூட்டமாகப் பார்க்க முடியாது. பண்ருட்டியார் பண்பாகப் பேசுபவர்.எப்படி ஒருமையில் பேசினார் என்று தெரியவில்லை. ஓ.பன்னீர்செல்வம் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார். அவரும் ஒருமையில் பேசியது ஒட்டுமொத்தமாக விரக்தியின் உச்சமாகத்தான் ஒவ்வொரு தொண்டர்களும் பார்க்கிறார்கள்.
அவருடைய இயல்பு உண்மையில் தெரிந்துவிட்டது. உள்ளே எப்படி,வெளியே எப்படி என்று தெரிந்துவிட்டது.உள்ளேதான் பவ்வியமானவர்.வெளியே வெடிக்கக்கூடிய அளவுக்குக் கோபமானவர் என்று நேற்றை அவருடைய சுயரூபம் தெரிந்துவிட்டது. உண்மையான முகம் நேற்று நடைபெற்ற நிர்வாக இயக்குநர்கள் கூட்டத்தில் தெரிந்துவிட்டது. தன்னுடைய அருமை மகன் பற்றிப் பேசியுள்ளார். அவருடைய மகனுக்கு வரவேண்டிய அமைச்சர் பதவியை தடுத்துவிட்டோமாம்.யாரும் தடுக்கவில்லை. அதனைத் தடுக்கும் வேலை அதிமுகவுக்கு கிடையாது. ஆனால் நாங்கள் ஏதோ தடுத்து நிறுத்தியதுபோல ஒரு கருத்தைத் தெரிவிக்கிறார்.அந்த கருத்தைத் தெரிவிக்கும்போது அவருடைய முகத்தைப் பார்க்கவேண்டுமே. கண்ணில் கண்ணீர் கசிகிறது. குடும்பம் என்பதுதான் இதன் மூலம் வெளிப்படுகிறது, அதன் தொடர்ச்சியாக்கத்தான் திமுகவின் பி டீமாக இன்றைக்குத் தேவையில்லாத கருத்துக்களை பேசி ,கட்சி தொண்டர்களைக் குழப்புகின்ற வேலையை செய்கிறார்.இருந்தாலும் இங்குக் குழப்பம் செய்ய முடியாது.நாங்கள் தெளிவாக இருக்கிறோம். முன்னாள் அமைச்சர்கள்,தலைமைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் ஒருமித்த கருத்தோடு எடப்பாடியார் தலைமையில் இருக்கின்றோம். நாங்கள்தான் கட்சி.நாங்கள் ஏன் கட்சி ஆரமிக்கவேண்டும். அவர் வேண்டுமானால் ஒன்று செய்யலாம்.
ஓ.பி.எஸ்.முன்னேற்றக் கழகம் என்று ஒன்றை ஆரமித்து உங்கள் பலத்தை நீங்கள் காண்பியுங்கள். நாங்கள் ஆரமிக்கவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.இரட்டை இலை எங்களிடம் உள்ளது.கட்சி எங்களிடம் உள்ளது,.தலைமை கழகம் எங்களிடம் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எங்களுக்கு அவசியமே இல்லாத ஒன்று. ஓ .பி.எஸ் முன்னேற்றக் கழகத்தை ஆரமித்து தன்னுடைய பலத்தைக் காண்பிக்கட்டும்.அவர் பலம் என்ன என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். நாம் ஒருவர்.நமக்கு நால்வர். நால்வர் அணி என்பது அம்மா காலத்தில் ஆரம்பித்து அது எப்படிப் போனது என்று தெரியும். அதுபோல் போட்டி அதிமுக என்று ஆரமித்தார்கள்.அது என்ன ஆனது.அதேபோலத்தான் இதுவும் காணாமல் போகும்.
கேள்வி :அதிமுகவின் கொடியை பயன்படுத்தக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளீர்களே
பதில் :ஆமாம்.தலைமைக்கழகம் நாங்கள்தான். உயர்நீதிமன்றம்,உச்சநீதிமன்றம் இதனை உறுதி செய்து எங்களிடம்தான் சாவியை அளித்தது. ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது யார்.பொதுக்குழுதானே நீக்கியது. சர்வ அதிகாரம் படைத்த பொதுக்குழு ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவர் சார்ந்தவர்களை நீக்கும்போது,அவர் எப்படி எங்கள் கட்சிக்கு சம்பந்தப்பட்டவராக இருக்க முடியும். உயர்நீதிமன்ற இருவர் கொண்ட அமர்வு ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளது.அப்படி இருக்கும்போது அவருக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லாமல் எப்படி கட்சியின் கரை வேட்டியைக் கட்டலாம். எப்படி கட்சிக் கொடியைப் பயன்படுத்தலாம். எப்படி கட்சியின் லெட்டர்பேடை சீல் உடன் பயன்படுத்தலாம். எப்படி கட்சி பெயரைக் குறிப்பிடலாம். அவர் எங்கள் கட்சியை பயன்படுத்தக்கூடாத அளவுக்கு அனைத்துவிதமான சட்ட நடவடிக்கையை நாங்கள் எடுப்போம்.
கேள்வி :கட்சி நிதியைக் கையாடல் செய்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்றும் நான்தான் நிதியை அதிகப்படுத்தி அளித்தேன் என்று குறிப்பிடுகிறாரே
பதில் : அவர் சொல்வது எல்லாம் உண்மையில்லை. அம்மாவின் ஆலோசனை,வழிகாட்டுதல் படி அதிக அளவு நிதியைச் சேர்த்து அதிக அளவுக்குத் தொண்டர்களும்,பொதுமக்களுக்கும் பயன் அளித்தார்கள்.
இதயம் காப்போம் என்ற திட்டத்தை யார் கொண்டுவந்தார்கள். இது குறித்து ஓ.பன்னீர்செல்வத்திற்குத் தெரியுமா.அப்போது அவர் தேனியிலிருந்தார். இந்தியாவிலேயே ஒரு கட்சியில் இதயம் காப்போம் திட்டத்தைக் கொண்டுவந்த இயக்கம் கழகம்தான். அந்த திட்டத்தில் அன்றைக்கே ஒரு லட்சம் அளித்தார். 2001 கால கட்டத்திலே. அப்போது இவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியாது. அவருக்குத் தெரிந்தது எல்லாம் டி,டி,.வியும் சசிகலாதான், வேறு யாரையும் தெரியாது.அவர்கள் இருவரும் இல்லை என்றால் இவரை யார் என்றே தெரியாது.அவர்கள்தான் அம்மாவிடம் கொண்டுவந்து விட்டார்கள்.அதனால் அவர் அம்மாவைத் தெரியும் என்று சொல்கிறார். நேற்று கூட்டத்தில் டிடிவி சார்,அதன்பிறகு சின்னம்மா என்று பேசுகிறார்.ஒரே நிலையில் இருக்கவேண்டும்.நாங்கள் எப்போதும் ஒரே நிலையில் இருக்கின்றோம். எங்களைத் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் அந்த குடும்பமும் தேவையில்லை.ஒபிஎஸ் தேவையில்லை என்றுதான் சொல்வோம்.
கேள்வி : மாவட்டச் செயலாளர்களைப் பணம் கொடுத்துத்தான் வாங்குகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளாரே
பதில் : எவ்வளவு பெரிய கட்சி.நாங்கள் பொதுக்குழுக் கூட்டம் நடக்கும்போது எடப்பாடியார் வானகரத்திற்கு வருவதற்கு மூன்று மணி நேரம் ஆனது. அவர்கள் நடத்தியது கூட்டமா.ஊர்ப் பெயர் தெரியாதவர்கள்,கட்சிக்குச் சம்பந்தம் இல்லாமல் எந்த தியாகமும் செய்யாமல் உறுப்பினர் அட்டை இல்லாமல்,கூலிக்கு ஆள் பிடித்து அங்கு அமர வைத்து, சுண்டல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.அது ஒரு கட்சியாக கிடையாது. அவர் ஒ.பி.எஸ் முன்னேற்றக் கழகம் என்று ஒன்றை ஆரமிப்பார். எங்களுக்கு பணத்தைக் கொடுத்து யாரையும் விலைக்கு வாங்கவேண்டிய அவசியம் கிடையாது. கொள்கை ரீதியாக,புரட்சித்தலைவர்,புரட்சித்தலைவி அம்மா மீதும் பற்று,பாசம்,விசுவாசம்,கட்சியை உயிர் மூச்சாகக் கொண்ட ஒவ்வொரு தொண்டரின் உணர்வு என்ற அடிப்படையில்தான் இன்று ஒன்றாக இருக்கிறோம்.உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மூன்று கோடி வாங்கி சென்றுள்ளார். அவருக்கு அந்த தேவை இருக்கலாம்.வலைவீசி ஆட்களை தேர்வு செய்வது. பிள்ளை பிடிப்பதுபோலே அவர் பூச்சி காராக மாறிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். பாராளுமன்ற தேர்தல் வருகிறது.40 இடங்களிலும் நாங்கள்தான் வெற்றிபெறுவோம். ஓ.பன்னீர்செல்வம் முதலில் கவுன்சிலராக நிற்கச் சொல்லுங்கள்.அதில்கூட இவர்கள் வெற்றி பெற முடியாது.
அந்த பத்திரிக்கை புது பார்முலா என்று தெரிவித்துள்ளது.என்ன புது பார்மு லா. நாங்கள் அவர்களிடம் பேசினோமா.நாங்கள் பேச வேண்டிய அவசியம் உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் என்ன புகழ் பெற்ற மாபெரும் கட்சியா.அவர்களுடன் பேசுவதற்கு. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை என்று போடுகிறார்கள்.எப்போது நடந்தது இந்த கூட்டம். இப்படி இருக்கும்,அப்படி இருக்கும் என்று சொல்லி ஒரு கட்சியை களங்கப்படுத்தும் செயலை தயவு செய்து செய்யக்கூடாது.இதற்கு எங்களுடைய கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். பத்திரிக்கை தர்மம் என்று ஒன்று இருக்கிறதா இல்லையா. நான் தற்போது உறுதியாகச் சொல்கிறேன்.எடப்பாடியார் தலைமையில் இயக்கம் இயங்கிக்கொண்டிருக்கும் நிலையிலே 2024 பாராளுமன்ற தேர்தலின்போது கழகத்தின் தலைமையிலான கூட்டணிதான் அமையும். எங்கள் தலைமையை ஏற்றுத்தான் அனைவரும் வருவார்கள்.அப்படி வரும்போது நாங்கள் அளிக்கும் சீட்தான்.எங்களை யாரும் வற்புறுத்த முடியாது. எனவே பொய்யான செய்தியைப் பரப்பிக் குழப்பத்தை ஏற்படுத்துவது போன்ற பணிகளில் பத்திரிகைகள் ஈடுபடவேண்டாம்.
கேள்வி :புரட்சித்தலைவரை எடப்பாடியார் பார்த்திருப்பாரா என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளாரே
பதில் : 1991 ல் ஓ.பன்னீர்செல்வம் யார் என்பது தெரியாது. 1996 ல் ஓ.பன்னீர்செல்வம் யார் என்று தெரியாது. 1989 ல் அவர் யார் என்று தெரியாது. 2001 ல்தான் வருகிறார். புரட்சித்தலைவரைப் பார்த்தோ,அல்லது கட்சியினரே பார்த்தோ அவர் வரவில்லை. தேனியில் மட்டும் அரசியல் செய்துகொண்டிருந்தவர்.நான் 1991 ல் வனத்துறை அமைச்சர்.சிறுபான்மைத்துறை அமைச்சராக இருந்தவர்.அம்மாவின் அமைச்சரவையில் 18வது அமைச்சராக இருந்தபோது முதல் கூட்டம் நடைபெற்றது பெரியகுளத்தில்தான். நான் பொதுக்கூட்டத்தில் பேசும்போது தூரத்தில் தொண்டர்போல இருந்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம். எடப்பாடியார் கிளை செயலாளராக இருந்து முன்னேறியவர்தான். நான் எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத்தலைவராக ஆரம்பத்தில் இருந்தவன். புரட்சித்தலைவரை நேரடியாகச் சென்று பார்த்தவுடன் அன்றைக்குப் பதவியை அளித்தார். தலைமைக்கழகத்தில் நான் நேரடி உறுப்பினர். ஆனால் இவர் எப்போது சென்னைக்கு வந்தார்.சென்னையே அவருக்குத் தெரியாது. டிடிவி தினகரன் எம்.பி. தேர்தலில் பெரியகுளத்தில் நிற்கும்போதுதான் சசிகலா மூலம் சட்டமன்ற உறுப்பினராக வந்தவர்.அவர் அனைத்து பணிகளையும் செய்வார்.அந்த பணிகளை எல்லாம் நம்மால் செய்ய முடியாது. எடப்பாடியார் 1989 ல் சட்டமன்ற உறுப்பினர். அதற்கு முன்னர் தலைவர் ஆதரவாளர்,அம்மாவின் ஆதரவாளர். வெண்ணிற ஆடை நிர்மலா அம்மாவை எதிர்த்து நிற்கும்போது இவர் சீப் ஏஜென்டாக இருந்தாரா இல்லையா. அம்மாவுக்கு எதிராக அம்மா தோற்கவேண்டும் என்று முயற்சி செய்து ஏதோ ஒரு கொல்லைப்புற வழியில் வந்துவிட்டு எறும்பு எல்லாம் சேர்ந்து புற்று எடுக்க அதில் கருநாகம் புகுந்ததுபோல புகுந்து இன்றைக்குக் கலகம் செய்ய நினைத்தீர்கள். கழகம் என்பது மிகப்பெரிய இயக்கம்.அதனை உடைக்க முடியாது.உங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள், தொண்டர்கள் ஆதரவு இருந்தால் நீங்கள் வாருங்கள். ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்கு மாவட்டச் செயலாளர் ,தொண்டர்கள் ஆதரவு இல்லை.
கேள்வி :கரூரில் நடைபெற்ற சம்பவம் குறித்து
பதில் :தமிழகத்தில் மொத்த மூன்று மர்ம தேசம் இருக்கின்றது.தமிழ்நாடு ஒரு மர்மதேசம்.பேசினால் உள்ளே போட்டுவிடுவார்கள். கொளத்தூர் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அங்குக் கெடுபிடி செய்து கைது செய்து பின்னர் விட்டுவிட்டீர்கள். போராட்டம் என்றால் ஏன் பயப்படுகிறீர்கள். அணில் இருக்கின்ற கரூர் ஒரு மர்ம தேசம். முன்னாள் அமைச்சர் வாகனத்தில் வரும்போதே கடத்துகிறார்கள்.சினிமாவில் வருவதுபோல செய்துள்ளார்கள்.மதுரையிலிருந்து குண்டர்களை அழைத்துவந்துள்ளார்கள்.இதனை நாங்கள் சட்டத்தின் முன் நிறுத்துவோம். அதற்குப் பிறகு தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்தவரை தாக்கியுள்ளார்கள்.குண்டர்களை நம்பி,ஜனநாயகத்தைக் கொல்லுகின்ற ஆட்சிதான் தமிழகத்தில் இன்றைக்கு நடந்துவருகிறது. அதே கரூரில் ஒரு சிறுமியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்கள். காவல்துறையும் இதில் ஈடுப்பட்டுள்ளது என்று தகவல் வருகிறது. கடமைக்கு மூன்று பேரைக் கைது செய்தால் போதுமா. கருப்பு ஆடு என்ற வகையில் காவல்துறையே இதில் ஈட்டுப்பட்டுள்ளார்கள் என்றால் அவர்களைக் கண்டுபிடித்து சிறையில் அடையுங்கள். இல்லை என்றால் நாங்கள் சிபிஐ விசாரணையைக் கேட்போம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.