அடையாளம் தெரிந்தது: கார் விபத்தில் பலியான 3 பேர் கல்லூரி மாணவர்கள்
![அடையாளம் தெரிந்தது: கார் விபத்தில் பலியான 3 பேர் கல்லூரி மாணவர்கள்](https://tn96news.com/wp-content/uploads/2022/12/IMG-20221219-WA0243-850x491.jpg)
கோவில்பட்டி புறநகர் பகுதியில் இன்று மாலை பஸ் -கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியானார்கள். முதலில் அவர்கள் யார் என்று அடையாளம் தெரியவில்லை.
3 பேர் உடல்களை போலீசார் பிரேத பரிசோதனை க்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இறந்தவர்கள் பற்றிய முழு விவரம் தெரிய வத்தது. இது பற்றிய விவரம் வருமாறு :-
கோவில்பட்டி கிருஷ்ணா நகரை சேர்ந்த லட்சுமணப் பெருமாள் மகன் கீர்த்திக்(22). இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை கல்லூரி முடித்து கீர்த்திக் தனது நண்பர்கள் கோவில்பட்டி அருகே வானரமுட்டியை அடுத்த வெயிலுகந்தபுரத்தைச் சேர்ந்த உதயகுமார் மகன் செந்தில்குமார் (24), நாலாட்டின்புதூர் மேலதெருவை சேர்ந்த பாலமுருகன் மகன் அஜய் (23), கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 1-வது தெருவை சேர்ந்த அழகர்சாமி மகன் அருண்குமார் (21), விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் விக்னேஷ் (23) ஆகியோருடன் காரில் கோவில்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார்.
இளையரசனேந்தல் கிராமத்தை அடுத்து பாலத்தில் வந்த போது எதிரே வந்த தனியார் பேருந்துடன் கார் மோதியது. இந்த விபத்தில் கீர்த்திக், செந்தில் குமார், அஜய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அருண்குமார், விக்னேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த், உதவி ஆய்வாளர் அரி கண்ணன் மற்றும் தீயணைப்பு அலுவலர் சுந்தர்ராஜ் தலைமையான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இடிப்பாடுகளின் சிக்கி இருந்த 3 பேரின் உடல்களையும் களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், படுகாயமடைந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதேபோல் தனியார் பஸ்சில் வந்து காயமடைந்த தனியார் கல்லூரி தோட்ட தொழிலாளி பிள்ளையார் நத்தத்தைச் சேர்ந்த மாடசாமி (62) என்பவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
விபத்து தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)