மதுரையில் மீனாட்சி அம்மன் -சுந்தரேசுவரர் சப்பர திருவிழா; வீதிகளில் தூவிய அரிசியை பெண்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றனர்

 மதுரையில் மீனாட்சி அம்மன் -சுந்தரேசுவரர் சப்பர திருவிழா; வீதிகளில் தூவிய அரிசியை பெண்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றனர்

பிரசித்தி  பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும்  சித்திரை பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போன்று மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழாவும் சிறப்பு வாய்ந்தது. உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படி அளந்த லீலையை விளக்கும் நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மார்கழி தேய்பிறை அஷ்டமி திருவிழா நேற்று நடத்தது.

இதையொட்டி தேர் போன்ற பெரிய சப்பரங்கள் அலங்கரிக்கப்பட்டு, தயார் நிலையில் இருந்தன. அதிகாலையில் சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளித்தனர். சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் கீழமாசி வீதி தேரடி பகுதிக்கு சென்றனர். அங்கு ரிஷப வாகனங்களில் இருந்தபடியே தேர் போன்ற சப்பரங்களில் எழுந்தருளினர்.

பெரிய சப்பரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், சிறிய சப்பரத்தில் மீனாட்சி அம்மனும் வீற்றிருந்தனர். காலை 6.10 மணி அளவில் சப்பரங்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தொடங்கினர். வெளி வீதிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமி, அம்மனை தரிசித்தனர். யானைக்கல், கீழவெளி வீதி, தெற்கு வெளிவீதி, கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக மதியம் 1.45 மணிக்கு சப்பரங்கள் தேரடியை அடைந்தன.

அம்மன் சப்பரத்தை இழுத்த பெண்கள் இதில் அம்மன் சப்பரத்தை பெண்கள் மட்டுமே இழுத்து வந்தது தனிச்சிறப்பாகும். அப்போது, அனைத்து உயிர்களுக்கும் சிவபெருமான் படி அளப்பதை விளக்கும் விதமாக அரிசியை வீதிகளில் போட்டு வந்தார்கள். கீழே சிதறி கிடந்த அரிசியை சேகரித்து பக்தர்கள், தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றனர். அந்த அரிசியை வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால் அன்னம் குறையாது என்றும், பசி, வறுமை இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை.யாக இருக்கிறது,.


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *