கோவில்பட்டியில் மது அருந்தும் போது தகராறு :கூலி தொழிலாளி கொலை -அண்ணன் ஆத்திரம்
கோவில்பட்டியை அடுத்த மேலபாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்த பூல்சாமி என்ற கொம்பையா மகன் கருப்பசாமி (வயது 26). இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் இன்று இரவு தனது அண்ணன் பாண்டித்துரையுடன் (29) மந்திதோப்பு சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான பாரில் மதுபானம் அருந்த சென்றார்.
அங்கு அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் மதுபான பாரை விட்டு வெளியே வந்த இருவரும் சிறு தூரம் நடந்து சென்றனர். அப்போது மீண்டும் தகராறு ஏற்படவே பாண்டித்துரை அருகே இருந்த கம்பியை எடுத்து கருப்பசாமியை தாக்கினார்.
இதில் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை தொடர்ந்து பாண்டித்துரை அங்கிருந்து ஓடி விட்டார்.
கொலை பற்றிய தகவல் அறிந்து கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று கருப்பசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பாண்டித்துரையை தேடி வருகின்றனர்.