• May 20, 2024

உதய்நிதி ஸ்டாலின் அமைச்சர் ஆவதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை ;டி. ஜெயக்குமார் சொல்கிறார்

 உதய்நிதி ஸ்டாலின் அமைச்சர் ஆவதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை ;டி. ஜெயக்குமார் சொல்கிறார்

சென்னை காவல் ஆணையரகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு :-

தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக அல்லும் பகலும் பாடுபட்டு அயராது உழைத்து ஒரு குடும்ப ஆதிக்கத்தை ஒழித்து அதாவது திமுகவின் குடும்ப ஆதிக்கத்தை ஒழித்து அவர்களை 13 ஆண்டுகள் வனவாசம் அனுப்பிய ஒரு மாவீரர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அவருடைய 35 ஆம் ஆண்டு நினைவுநாள் வருகிறது.
இந்த நினைவு நாளில் எதிர்க்கட்சித் தலைவர்,கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் புரட்சித்தலைவருக்கு நினைவஞ்சலி செலுத்தி, அவருடன் தலைமைக்கழக நிர்வாகிகளும்,முன்னாள் அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர் மற்றும் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்துவருபவர்கள்.,தொண்டர்கள் என அனைவரும் ஒன்றுகூடி புரட்சித்தலைவருக்கு நினைவஞ்சலி செலுத்துகிறோம். இதற்கு 10-30 மணியிலிருந்து 11.30 வரை அனுமதி கேட்டும் அது மட்டுமல்லாமல் நினைவஞ்சலி செலுத்திய பிறகு புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் நினைவிடத்திற்கு அருகே அந்த வளாகத்திற்குள்ளாகவே உறுதிமொழி ஏற்கின்ற நிகழ்வும் நடக்கவுள்ள காரணத்தினால் 24 ம் தேதியன்று காலை 10.30 மணியிலிருந்து 11.30 வரை எங்களுக்கு அனுமதி தரவேண்டும் என்ற வகையிலே மாநகர ஆணையரகத்தில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது,அவரும் அதனைப் பெற்றுக்கொண்டு உரிய வகையில் அனுமதியும் பாதுகாப்பும் கொடுப்பதாகத் தெரிவித்தார்.

அண்ணா, கழகத்தை ஒரு குடும்பமாக பாவித்தார். அன்புத் தம்பி என்று அழைத்து ஒரு குடும்ப பாசத்துடன் இருக்கும் ஒரு இயக்கமாக மாற்றிக் காட்டினார்.அதேபோல புரட்சித்தலைவர் எம்ஜிஆரும் ரத்தத்தின் ரத்தங்கள் என்று சொல்லி கழகத்தை ஒரு குடும்ப பாசமிக்க இயக்கமாக அண்ணா வழியிலே புரட்சித்தலைவர் உருவாக்கிக் காட்டினார். புரட்சித்தலைவி அம்மாவைப் பொறுத்தவரையில் எல்லோரும் தன்னுடைய குழந்தைகள் அம்மா என்ற பாசத்துக்குரிய சொல்லைச் சொல்லி,ஒரு குடும்ப பாசமிக்க இயக்கமாக உருவாக்கினார்.
ஆனால் திமுகவைப் பொறுத்தவரைக் கழகம் குடும்பம் என்பது சென்று குடும்பமே கழகம் என்கின்ற அளவுக்கு ஆகிவிட்டது.அது ஒரு கார்பரேட் நிறுவனம் என்ற காரணத்தினாலே, இனிமேல் திமுகவின் ஹெச். ஆர். ஆக உதயநிதி இருப்பார்.
அனைத்திற்கும் ஆளுநர் தேவையில்லை என்று சொல்லி வருபவர்கள் அவர்கள். அவர் மகனுக்குப் பட்டம் சூட்டவேண்டும்,முடி சூட்ட வேண்டும் என்றபோது மட்டும் ஆளுநர் தேவையா? உதயநிதிக்குப் பட்டத்து இளவரசர் சூட்டுவதின் மூலமாக இனிமேல் திமுகவைப் பொறுத்தவரையில் முடிந்த சகாப்தமாகதான் பார்க்க முடியும்.
அந்த கட்சியில் உழைத்தவர்கள் எவ்வளவோ பேர் உள்ளார்கள். கட்சியில் எவ்வளவோ பேர் தியாகம் செய்தவர்கள் உள்ளார்கள். அந்த கட்சிக்காக எவ்வளவோ பேர் கஷ்டப்பட்டிருப்பார்கள். ஆனால் வாழையடி வாழையாக அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அரசு பதவிக்கு வர முடியும் என்றால்,அவரின் கனவு நனவாகியுள்ளது.
உதய்நிதி அமைச்சர் ஆவதால் தேனும் பாலும் ஆறாக ஓடப் போவதில்லை. தமிழ்நாடு ஒன்றும் அமெரிக்கா போல ஆகிவிடாது. தமிழகம் ஒன்றும் லண்டன் போல ஆகிவிடாது. ஒன்றும் நடக்கப்போவதில்லை.

அரசியலில் அவர்கள் நேற்று ஒரு பேச்சு பேசுவார்கள்.இன்று ஒரு பேச்சு பேசுவார்கள்.ஒரே பேச்சாக இருக்கவேண்டும். அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழக மக்களின் எதிர்பார்ப்புக்கு அல்வா கொடுத்து விட்டார்கள். ஆட்சியில் இல்லாதபோது என்ன சொன்னார் ஸ்டாலின்.அதாவது அவருக்குப் பின்னால் உதயநிதியோ, குடும்பத்தைச் சார்ந்தவர்களோ யாருமே அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று சொன்னாரா இல்லையா. அவர்கள் குடும்ப டிவியான சன் டிவியில் போய்க்கொண்டிருக்கின்றது. நேற்று ஒரு சொல்,இன்று ஒரு சொல்,நாளை ஒரு சொல் என்று நாட்டுமக்களை ஏமாற்றித்திரிகின்றார்கள்.
சொன்னது ஒன்று செய்வவது ஒன்று, நேற்று வாரிசு அரசியலைக் கொண்டுவர மாட்டோம் என்று சொல்லி இன்று வாரிசு அரசியலைக் கொண்டுவருகிறார்கள். அந்த கட்சியில் உள்ள சீனியர்களுக்கு இரண்டு பிரச்சனை உள்ளது. இந்த அரசை வழிநடத்துவது எங்கள் கட்சியிலிருந்து சென்ற,எங்கள் கட்சியால் வளர்ந்து அடையாளம் காட்டப்பட்டவர்கள்,கட்சியின் உப்பைச் சாப்பிட்டவர்கள்,கட்சிக்குத் துரோகம் செய்தவர்கள் இன்றைக்கு அங்குச் சென்று குளிர்காய்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்த 8 பேர் இன்றைக்குக் கட்சியை வழிநடத்துகிறார்கள். அது மூத்தவர்களுக்கு மனசு கஷ்டப்படுகிறார்கள்.
உதயநிதி ஸ்டாலினைக் கொண்டுவந்ததின் காரணமாக ஒரு பெரிய அளவிற்கு மூத்த அமைச்சர்கள் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.வெளியில் சொல்ல முடியவில்லை அவர்களால். வெளியே சொல்ல முடியாத அளவுக்கு மூத்த அமைச்சர்களின் நிலையும்,அடி மட்ட தொண்டர்களின் நிலையும் உள்ளது. அதே நேரத்தில் அவர்கள் கட்சிக்குள் பெரிய பிரச்சனையாகி இதோடு திமுகவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்குரிய,சகாப்தம் முடிகின்ற நிகழ்வாகதான் அவரின் முடி சூட்டுவிழாவை பார்க்க முடியும்.

கேள்வி : அண்ணாவின் கொள்கை இருமொழி கொள்கை.சமூக நீதி,இதுபோன்ற விஷயங்களில் நீங்கள் தற்போது கடுமையான எதிர்ப்பு காண்பிப்பதுபோல தெரியவில்லையே

பதில் : அண்ணாவின் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். இரு மொழி கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்.அதேபோல மத்தியில் கூட்டாட்சி,மாநிலத்தில் சுயாட்சி.மாநிலத்தின் உரிமையை யார் மீட்டெடுத்தது. காவிரி நதி நீர் பிரச்சனையில் திமுக என்ன செய்தது. கச்சத்தீவு விஷயத்தில் என்ன செய்தார்கள்.நாங்கள்தான் வழக்குத் தொடுத்துள்ளோம். திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.

கேள்வி : நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை என்று அண்ணா தெரிவித்தார்.அதில் உங்கள் நிலைப்பாடு

பதில் :திமுக 17 வருடம் ஆட்சியிலிருந்தார்கள்.அவர்கள்தான் அடிக்கடி இந்த கோஷத்தை எழுப்புவார்கள். 17 வருடம் மத்தியிலிருந்தார்கள்.செய்யும் இடத்திலிருந்தார்கள். அவர்கள் ஆதரவை வாபஸ் வாங்கினால் அரசு கவிழ்ந்துவிடும்.அந்த அளவிலே இருந்தார்கள்.கல்வி மாநில பட்டியலிருந்து பொது பட்டியலுக்குச் செல்கிறது. அதனை மாற்றியிருக்கலாம்.இவை அனைத்தும் மாநில சுயாட்சி விவகாரம்தானே. ஏன் இதில் திமுக விட்டுக்கொடுத்தது. ஆனால் நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோமே. அன்றைக்குத் திமுக நினைத்திருந்தால் இந்தியா முழுவதும் ஆளுநர் பதவியை ஒழித்திருக்கலாம்.ஏன் ஒழிக்கவில்லை.எங்களைப் பொறுத்தவரையில் அரசமைப்பு சட்டத்திற்கு மதிப்பு அளிக்கிறோம்.அந்த அடிப்படையில் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆளுநர் தேவையில்லை என்கிறார்களே.எங்கள் ஆட்சிக் காலத்தில் 10 முறை ஆளுநரைச் சென்று சந்தித்துள்ளார். சட்டப்பேரவையில் இவர்களே ஜனநாயக படுகொலை செய்துவிட்டு,பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்து,சட்டையைக் கிழித்துக்கொண்டு பனியனுக்கு விளம்பரம் தருவதுபோல ஆளுநரைச் சந்தித்தது யாரு. எங்கள் ஆட்சியைக் கலைக்கவேண்டும் என்று 10 முறை ஆளுநரைச் சந்தித்தீர்கள்.இப்போது உங்கள் மகனுக்கு முடிசூட்ட வேண்டும் என்பதற்கு ஆளுநர் தேவை உள்ளது. ஆனால் பாராளுமன்றத்தில் ஆளுநர் தேவையில்லை என்று குரல் கொடுப்பீர்கள். உங்கள் மகனுக்குத் தலைமைச் செயலாளரை வைத்து பதவிப் பிரமாணம் செய்யவேண்டியதுதானே.

கேள்வி:- குடியுரிமை சட்டம் குறித்து….

பதில்:- எங்களைப் பொறுத்தவரையில் எந்த மதமாக இருந்தாலும் ஒற்றுமையாக வாழ்கின்ற பூமி.எந்த ஒரு சட்டமாக இருந்தாலும் யார் உரிமையும் பறிக்ககூடாது.உரிமையைப் பறித்தால் முதலில் குரல் கொடுக்கும் இயக்கம் கழகமாகத்தான் இருக்கும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *