தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீது குற்றவியல் நடவடிக்கை; கலெக்டரிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு கோரிக்கை
![தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீது குற்றவியல் நடவடிக்கை; கலெக்டரிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு கோரிக்கை](https://tn96news.com/wp-content/uploads/2022/12/Picture1-850x449.jpg)
ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் வழக்கறிஞர் ஹரிராகவன், ஒருங்கிணைப்பாளர்கள் பாத்திமா பாபு, கிருஷ்ணமூர்த்தி, கிதர் பிஸ்மி, மாரிசெல்வம் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ரமேஷ், மாநகர செயலாளர் முருகபூபதி, ஐ.ஜே.கே. தென் மண்டல செயலாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன், பிரபு, இளங்கோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அகமது இக்பால், தே.மு.தி.க. மாநகர் மாவட்ட செயலாளர் தயாள லிங்கம், மற்றும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட 13 பேரின் குடும்பத்தினர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர், கலெக்டர் அலுவலகம் நோக்கி அணிவகுத்து வந்தனர்.
பின்னர் ஒருங்கிணைந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
“நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு நடந்த அமைதி வழிப் போராட்டத்தில், காவல் துறையால் 13 பேர் சுட்டும், 2 பேர் அடித்தும் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக கடந்த அதிமுக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் கடந்த மே-18 ல் தமிழக அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. ஆணையத்தின் அறிக்கையை முழுவதுமாக ஏற்றுக்கொள்வதாக தமிழக சட்டமன்றத்தில் நிகழ்ந்த வாதத்தின் போது முதல்வர் அறிவித்தார். “துப்பாக்கிச்சூட்டில் சம்பந்தப்பட்ட அனைவரும் குற்றவாளி கூண்டில் ஏற்றப்படுவார்கள்” என்று உறுதியளித்தார்.
ஆனால் 17-10-22 அன்று தமிழக அரசு வெளியிடப்பட்ட அரசாணையில், அமைச்சரவை முடிவுப்படி, ஆணையத்தின் பரிந்துரையில் துறை ரீதியான நடவடிக்கை மட்டும் ஏற்றுக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும், மனவேதனையையும் உண்டாக்கியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக்கேற்ற வேலை, வேலை வாய்ப்பு & வெளிநாடு செல்ல வழக்குத் தடை நீக்கம், ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீதும் தலைவர்கள் மீதும் பதியப்பட்ட 2 வழக்குகள் வாபஸ், சட்ட முரணாக சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு ரூ.1லட்சம் நிவாரணம் உட்பட பல்வேறு துயர்துடைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மக்களை கொன்றவர்கள் மீதான குற்ற நடவடிக்கையும், துறை ரீதியான நடவடிக்கையும் ஆணைய அறிக்கை வந்தவுடன் தமிழ்நாடு அரசு எடுக்கும் என எதிர்பார்த்தோம். தாங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, மக்களை படுகொலை செய்தவர்கள் எந்த உயர் பொறுப்பில் இருந்தாலும் குற்றவியல் நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவார்கள் எனவும், கடந்த அதிமுக அரசின் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசாணை பலவீனமானது என்றும் தாங்கள் ஆட்சிக்கு வந்த பின்பு சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் நிரந்தரமாக அகற்றப்படும் என்றும் உறுதியளித்து இருந்தீர்கள்.
தங்களின் வாக்குறுதியை உண்மையானது, சரியானது, உறுதியாக நடைமுறைக்கு வரும் என்று ஏற்றுக்கொண்டோம். ஆனால், தற்போது கொலை செய்த போலீசார் மீது குற்ற நடவடிக்கை இல்லை என்பது தூத்துக்குடி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே, அமைச்சரவையை மீண்டும் கூட்டி துப்பாக்கிச் சூடு நடத்தி மக்களை கொன்ற போலீஸார் மீதும், அதற்கு துணை போன அதிகாரிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டியும், சிறப்பு சட்டமியற்றி ஸ்டெர்லைட்டை அகற்றி, நீதியை நிலைநாட்டிட வேண்டும்.
இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்தது,.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)