கோவில்பட்டி அருகே திட்டங்குளம் பஞ்சாயத்து தலைவர் வெட்டிக்கொலை
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே திட்டக்குளம் ஊராட்சி மன்றத்தலைவராக இருந்தவர் பொன்ராஜ். (வயது 63) விவசாயியான இவர் ஆடு வியாபாரமும் செய்து வந்தார்.
இன்று(22.8.2022) பகல் 12 மணிக்கு தெற்குத் திட்டங்குளம் காலனி பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்ற போது அங்கு மறைந்து இருந்த 4 பேர் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்,
அவர்களின் பிடியில் இருந்து இருந்து தப்பிக்க முடியாமல் பொன்ராஜ் சிக்கிக்கொண்டார். 4 பேரும் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பொன்ராஜ் இறந்து போனார். ‘
இது பற்றி தகவல் அறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொன்ராஜ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
பஞ்சாயத்து தலைவர் பொன்ராஜ் திட்டங்குளம் பஞ்சாயத்து தலைவராக 40 ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகித்தவர், திருச்செந்தூரில் உள்ள சமுதாய மடம் வளர்ச்சிக்கு தொடர்ந்து துணையாக இருந்தவர், கோவில்பட்டியில் மாவீரர் சுந்தரலிங்க தேவேந்திரனார் முழு உருவ வெண்கல சிலை அமைக்க முழு முதற் காரணமாக இருந்தவர், தலைபா என்று அந்த பகுதி மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட பொன்ராஜ் கொலைக்கான காரணம் தெரியவில்லை.
சமீபத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒரு விவகாரத்திற்கு கையெழுத்து போட்டுக் கொடுக்கும்படி உத்தரவாதம் கேட்டு சிலர் வலியுறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. அவர் கொலை செயப்பட்டதற்கு இந்த பிரச்சினை காரணமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் பொதுப்பிரச்சினைகளுக்காக அடிக்கடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொன்ராஜ் புகார் மனு கொடுப்பது வழக்கமாம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இந்த கொலையில் தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
பட்டப்பகலில் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக அதே ஊரைச் சேர்;ந்த பா.ஜனதா . ஒன்றிய இளைஞரணி தலைவர் கார்த்திக் மற்றும் வசந்த் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆகஸ்ட் 15 அன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்ற சொன்ன தீர்மானத்தினை நிறைவேற்றவில்லை, இது தொடர்பாக கேட்க சென்ற போது பொன்ராஜ் தங்களை அவதூறாக பேசியதால் கொலை செய்தாக இருவரும் கூறி வருவதாகவும், மேலும் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை கூறி வருவதால் இந்த கொலைக்கு வேறு பின்னணி இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும், தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.