• February 7, 2025

இறைவனின் அருளைப் பெற விடாமல் தடுக்கும் மனிதனின் 6 குணங்கள்

 இறைவனின் அருளைப் பெற விடாமல் தடுக்கும் மனிதனின் 6 குணங்கள்

அரிஷத்வர்கம் எனச் சொல்லப்படும் மனிதனின் ஆறு குணங்களும், மனிதனின் மனதினுள்ளேயே மறைந்திருந்து அவனை மெல்ல மெல்ல அழிக்கின்றன.

அரி என்றால் எதிரி எனவும், ஷத் என்றால் ஆறு எனவும், வர்கம் என்றால் குழு எனவும் பொருள்படும்.

ஒவ்வொன்றும் மனிதனின் வாழ்க்கையில் மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தும் இயல்புடைய குணங்களாகும்.

பக்தி நிலையைப் பொறுத்தவரை கீழ்க்காணும் இந்த 6 குணங்களும் மனிதன் இறைவனின் திருவருளைப் பெற விடாமல் தடுக்கும் ‘எதிரிகள்’ எனச் சொல்லப்படுகின்றது.

  1. காமம் – தீவிர ஆசை
  2. குரோதம் – கோபம்
  3. லோபம் – பேராசை
  4. மோகம் – மருட்சி
  5. அகங்காரம் – இறுமாப்பு
  6. மதஸர்யம் – பொறாமை

*காமம் என்றால் “அவா” அல்லது “ஆசை” எனப் பொருள்படும். தர்மநியதிக்கு உட்பட்ட ஆசை ஆக்கத்தைத் தரும். அதுவே தர்மநியதிக்கு எதிரான ஆசை அழிவையே தரும். பணம், பொருள், புகழ், பதவி போன்றவற்றின் மீது தீவிர ஆசை கொள்வது குற்றமாகும். எனவே, ஆசையை அடக்கிட வேண்டும்.

*குரோதம் என்றால் ”கோபம்” அல்லது ”சினம்” எனப் பொருள்படும். ஆசைப்பட்ட ஒரு பொருளை அடைய முடியாமல் போய்விட்டால், அந்த ஆசை கோபமாக மாறும். கோப உணர்ச்சி மனத்தின் செயல்பாடுகளில் சஞ்சலங்களை ஏற்படுத்தி, வாக்கையும் செயலையும் பாதிக்கும். கோபத்தால் எழும் வாக்கும் செயலும் எப்போதும் சரியானதாக இருப்பதில்லை. எனவே, சினத்தைப் போக்கிட வேண்டும்.

*லோபம் என்றால் “பேராசை” அல்லது “வெகுதல்” எனப் பொருள்படும். தேவைக்கு அதிகமான ஒன்றை அடைவதற்காக ஆசை கொள்வது பேராசை எனப்படுகின்றது. அதேபோல், மற்றவருக்கு சொந்தமான ஒன்றை அடைய முயல்வது வெகுதல் எனப்படுகின்றது. வேண்டியது கிடைத்தால் அதைக் கொண்டு திருப்தி கொள்ள வேண்டும். அதைப் போலவே, மேலும் மேலும் வேண்டும் என்று பேராசை கொள்ளக் கூடாது. எனவே, பேராசையை தவிர்த்திட வேண்டும்.

*மோகம் என்றால் “மருட்சி” அல்லது “பற்றுதல்” அல்லது “மயக்கம்” எனப் பொருள்படும். ஒரு பொருளின் மீது கொண்ட அளவற்ற பற்றுதலினால், அதை எப்படியாவது அடைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. இதுவே ஒருவனைப் பல தீயசெயல்களிலும் ஈடுபடத் தூண்டுகின்றது. எனவே, மருட்சியை நீக்கிட வேண்டும்.

*அகங்காரம் என்றால் “இறுமாப்பு” அல்லது “செருக்கு” எனப் பொருள்படும். பதவி, கல்வி, அறிவு, செல்வம் போன்றவற்றை ஒருவன் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாகக் கொண்டிருக்கும் போது, அவனிடம் செருக்கு ஏற்படுகின்றது. அகங்காரம் என்ற எதிரி ஒருவனின் மனத்தில், அவன் மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையைத் தூண்டுகின்றது. இதனால் அவன் சக மனிதர்களிடம் மரியாதை, கருணை போன்ற அடிப்படை நற்குணங்கள் இன்றிச் செயல்படுகின்றான். ஆகவே, செருக்கை ஒழித்திட வேண்டும்.

*மத்ஸர்யம் என்றால் “பொறாமை” எனப் பொருள்படும். தன்னை விட வேறு எவனும் கல்வி, பதவி, அறிவு, செல்வம் போன்றவற்றில் உயர்ந்து விடக் கூடாது என்ற ஓர் எண்ணம் தான் பொறாமை ஆகின்றது. மற்றவர்களின் அறிவாற்றல், திறமைகள், செல்வம் போன்றவற்றைக் கண்டு பொறாமை கொள்பவர்கள் அவற்றை எப்படியாவது அழித்துவிட எண்ணம் கொள்வர்.

இத்தகைய ஓர் எண்ணம் உண்மையில் தன்னைத்தானே அழித்துக் கொள்ள விதைக்கப்பட்ட விதை என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். எனவே, பொறாமையை அகற்றிட வேண்டும்.

இறைவனின் முழுமையான திருவருளை அடையும் எண்ணம் உள்ளவர்கள், மேற்காணும் ஆறு தீய குணங்களையும் விடுத்து, நாள்தோறும் இறைவனின் நாமத்தை உச்சரித்து, மந்திர உச்சாடனம் செய்தும் இறைவன் புகழ்பாடும் புராணங்களைப் படித்தும் வந்தால் ஆறு எதிரிகளையும் அழித்து வாழ்வில் மேன்மையடையலாம்.
காசி விஸ்வநாதன், திருநெல்வேலி

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *