அ.தி.மு.க. கட்சி அலுவலகத்துக்கு 1990 ம் ஆண்டு சீல்: அதே நிலைமை தற்போது உருவானபோது மு.க.ஸ்டாலின் தயக்கம் காட்டியது ஏன்?
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்தது. ஜானகி அம்மாள் தலைமையில் ஓரு அணியும், ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும் செயல்பட தொடங்கியது. 1989 தேர்தலை ஜா. அணி மற்றும் ஜெ.அணி என்று வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில் ஜா. அணியில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. ஜெ. அணியில் 27 தொகுதிகளில் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
இதை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை பொறுப்பை ஜெயலலிதா ஏற்றார். கட்சி அலுவலகத்தையும் மீட்டார். பின்னர் 1990 ம் ஆண்டில் அ.தி.மு.க.வில் நெடுஞ்செழியன், அரங்கநாயகம், திருநாவுக்கரசு, சாத்தூர் ராமசந்திரன் ஆகியோர் திடீர் எதிர்ப்பு தெரிவித்து பிரிந்து சென்றனர். இதன் காரணமாக நால்வர் அணி உருவானது, அவர்கள் தனி கட்சி அலுவலகம் திறந்து அரசியலை நடத்த தொடங்கினர்.
இந்த நிலையில் திருநாவுக்கரசு, சாத்தூர் ராமசந்திரன் ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்துக்கு சென்று வாக்குவாதம் செய்தனர். அப்போது இரு தரப்பினர் இடையே சலசலப்பு ஏற்பட்டது. மோதல் ஏற்படும் நிலை உருவானது.
அப்போது முதல் அமைச்சராக இருந்த கருணாநிதி உடனடியாக போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். போலீசார் அசம்பாவிதத்தை தவிர்க்க கட்சி அலுவலகத்தை மூடி சீல் வைத்தனர். அதன்பிறகு 4 மாதங்கள் கடந்து அ.தி.மு.க. கட்சி அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டது.
கருணாநிதி ஆட்சி காலத்தில் அ.தி.மு.க. அலுவலகத்தில் சின்ன தகராறு நடந்தபோதே கடும் நடவடிக்கை எடுக்கபப்ட்டு கட்சி அலுவலகம் மூடப்பட்டது. 1990 ம் ஆண்டு நடந்த நிலைமை இப்போது மீண்டும் உருவாகி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதிக்கொள்ளும் நிலை கடந்த வாரம் ஏற்பட்டது,. கட்சியில் ஒற்றை தலைமை கோஷம் எழுந்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கட்சி அலுவலகத்தில் பேட்டி அளித்துவிட்டு காரில் கிளம்பியபோது பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் காரை வேகமாக தட்டி கூச்சல் போட்டனர், மகளிர் அணி நிர்வாகிகள் சிலர் கண்ட குரல் எழுப்பினார்கள்.
இந்த சம்பவத்துக்கு மறுநாள் பெரம்பூர் தொகுதியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் மாரிமுத்து என்பவர் கட்சி அலுவலக வளகத்துக்குள் கடுமையாக தாக்கப்பட்டார். ரத்தம் சொட்ட சொட்ட அவர் காரில் ஏற்றப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றார்.
இந்த சம்பவத்தை வைத்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்து இருக்கலாம். மேலும் அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்கும் வகையில் கட்சி அலுவலகத்தை மூடி போலீஸ் மூலம் சீல் வைத்திருக்க முடியும். ஆனால் அப்படி எந்த நடவடிக்கையும் அவர் எடுக்க வில்லை.
தமிழ்நாட்டை பொறுத்தவரை பா.ஜனதா காலூன்றக்கூடாது என்பதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தை மூடி கடுமையான நடவடிக்கை எடுக்கபோய் அது பா.ஜனதாவின் வளர்ச்சிக்கு காரணமாகிவிடகூடாது என்று அவர் கருதுகிறார். அதன் காரணமாகவே அவர் இந்த விஷயத்தில் அமைதி காக்கிறார் என்று கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
S.K.T.S.திருப்பதி ராஜன்