13-ந் தேதி பள்ளிகள் திறப்பு ஏற்பாடுகள் தீவிரம்; வாகனங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்
தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் பொது தேர்வு முடிந்து மே மாதம் கோடை விடுமுறை விடுவதும், ஜூன் தொடக்கத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதும் வழக்கம்.
கொரோனா பிரச்சினை காரணமாக இவ்வாண்டு மே மாதம் வரையில் பள்ளிகள் திறந்திருந்தது. இறுதி தேர்வும் நடந்தது. அதனால் ஜூன் மாதம் முதலிலேயே திறக்க வேண்டிய பள்ளிகள் நாளை மறுநாள் 13ம் தேதி (திங்கட்கிழமை) திறக்க இருக்கிறது.
இந்தநிலையில் பள்ளி கட்டிடங்கள், குடிதண்ணீர், கழிவறை வசதிகள், மற்றும் வாகனங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறதா என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்திற்கு வரவழைக்கப்பட்ட பள்ளி வாகனங்களை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பள்ளி கல்வித்துறை மூலமாக பள்ளிகள் அனைத்தும் வருகிற திங்கட்கிழமை திறக்கப்படுகிறது. பள்ளிகள் திறக்கும் முன் 2012 விதிகளின்படி பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் 133 வாகனங்கள், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் 120 வாகனங்கள் ஆய்வு செய்யப்படும். திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் பள்ளி வாகனங்கள் அனைத்தும் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாகனத்திலும் தரையில் இருந்து 25 செ.மீ. உயரத்தில் படிக்கட்டு, வாகனத்தின் உள்ளே தரமானதாக இருக்கைகள், கேமரா, அவசரகால வழி,; முதலுதவி மருந்துகள், தீயணைப்பு கருவி ஆகியவை இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்படுகிறது. வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் 50 கி.மீ. வேகத்திற்கு மேல் சென்றால் வாகனங்கள் நின்றுவிடும். ஏர் ஹாரன் பொருத்தக்கூடாது. பள்ளி வாகனங்களில் இவை அனைத்தும் இருந்தால்தான் வாகனங்ளை இயக்குவதற்கு அனுமதி வழங்கப்படும். ஆட்டோக்களும் ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.