பா.ஜ.க. இரட்டை வேடம் : சி.பொன்னையன் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதில்
![பா.ஜ.க. இரட்டை வேடம் : சி.பொன்னையன் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதில்](https://tn96news.com/wp-content/uploads/2022/06/ponnaiyan-annamalai-850x560.jpg)
அ.தி.மு.க.,வின் அம்மா பேரவை மாவட்ட செயலாளர்களுக்கான 2 நாள் செயல்திறன் பயிற்சி சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில்,முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க அமைப்புச் செயலாளருமான பொன்னையன் பேசியதாவது:-
அ.தி.மு.க.,வின் கூட்டணி கட்சியாக பா.ஜ.க. இருந்தாலும், அதன் வளர்ச்சி அ.தி.மு.க., தமிழகம் மற்றும் திராவிடக் கொள்கைகளுக்கு நல்லதல்ல.
தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிராக பா.ஜ.க. செயல்படுகிறது. காவிரி நதிநீர் மற்றும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளில் பா.ஜ.க இரட்டை வேடம் போடுகிறது. கர்நாடக பா.ஜ.க., தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுப்பதற்கு எதிராக உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டாம். கர்நாடகாவுக்கு காவிரி நீரை வழங்க வேண்டும் என கூறுகிறது. ஆனால், தமிழ்நாடு பாஜக உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறக்க வேண்டும் என்கிறது.
அ.தி.மு.க. பின்னுக்கு தள்ளப்படும் என்ற பிரசாரத்தை மறைமுகமாக பா.ஜ.க. செய்து வருகிறது. நாம் அனைவரும் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் செயல்பட வேண்டும். காவிரி, பாலாறு, முல்லை பெரியாறு விவகாரங்களில் தமிழ்நாட்டின் நலனுக்காக பா.ஜ.க. குரல் எழுப்புவது கிடையாது. மக்கள் மத்தியில் இதை நாம் அம்பலப்படுத்த வேண்டும்.
பா.ஜ.க.வின் அணுகுமுறையை அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு சமூக ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்த வேண்டும். கட்சி உறுப்பினர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு சி,பொன்னையன் பேசினார்.
பொன்னையனின் இந்த பேச்சு அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க.,வுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையிடம், இது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்து அண்ணாமலை கூறியதாவது:-
யார் வேண்டுமானாலும் கருத்து சொல்ல உரிமை உண்டு. எல்லா தலைவர்களுக்கும் தங்களுடைய கட்சி தமிழகத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அது தவறில்லை. காவிரி, முல்லைப்பெரியாறு, இந்தி உள்ளிட்ட விஷயங்களில், தமிழர்களுக்கு எது நல்லதோ, அதனையே பா.ஜ.க செய்து வருகிறது.
தமிழக மக்களுக்கு விரோதமாக பா.ஜ.க. செயல்பட்டதில்லை. காவிரி, முல்லைப்பெரியாறு விவகாரங்களில் தி.மு.க.,வும், காங்கிரசும் தான் இரட்டை நிலைப்பாடு எடுத்து வருகின்றன,
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறி இருப்பதாவது:-
ராஜ்யசபா எம்.பி.,பதவி கிடைக்காததால் பொன்னையன் அதிருப்தியில் உள்ளார். கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்த பொன்னையன் முயற்சி செய்கிறார். பா.ஜ.க., தமிழ்நாட்டு உரிமைகளுக்காக போராடும் கட்சி; காவிரி பிரச்சினைக்காக கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவரும், ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவரும் அண்ணாமலை ஆவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)