கொச்சி கடலில் கவிழ்ந்த சரக்கு கப்பல் முழுவதுமாக மூழ்கியது

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சிக்கு கடலில் சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த கப்பலில் உள்ள கன்டெய்னர்களில் ரசாயனம் இருந்தது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அரபிக்கடலில் நேற்று பலத்த காற்று வீசியது. கொச்சி அருகே நடுக்கடலில் சரக்கு கப்பல் சென்றபோது திடீரென்று கவிழ்ந்தது. நல்லவேளையாக மூழ்காமல் சாய்ந்த நிலையில் நின்றது. மேலும் சரக்கு கப்பலில் ரசாயனம் இருந்த கன்டெய்னர்கள் கடலுக்குள் விழுந்தன.
இந்த கப்பலில் மாலுமிகள் உள்பட 24 பேர் இருந்தனர். இவர்களில் 9 பேர் உடனடியாக உயிர்காக்கும் ஜாக்கெட்டுகளை பயன்படுத்தி கடலுக்குள் குதித்து நீந்திச்சென்று தப்பித்தனர். ஹெலிகாப்டர் மூலமும், மாற்று கப்பல் மூலமும் 12 பேர் மீட்கப்பட்டனர். மேலும் 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கடலில் ரசாயனம் கொட்டியதால் அப்பகுதி ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடலோர பகுதி மக்களுக்கும், மீனவர்களுக்கும் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சரக்கு கப்பலில் பணியில் இருந்த அனைத்து ஊழியர்களும் காப்பாற்றப்பட்ட நிலையில், கப்பல் முழுவதுமாக இன்று கடலில் மூழ்கியது. சரக்கு கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் மணிக்கு ஒரு கிலோ மீட்டர் வேகத்தில் கரைக்கு நகர்ந்து வருகிறது.
சரக்கு கப்பலில் இருக்கும் 640 கண்டெய்னரில், 13 கண்டெய்னரில் மிக ஆபத்தான பொருட்கள் உள்ளதால் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சரக்கு கப்பல் மூழ்கி இருக்கும் இடத்தை சுற்றி கடலோர காவல் படை, சிறிய விமான மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டும் வருகிறது.
