சாலை விபத்தில் உயிரிழந்த கோவில்பட்டியை சேர்ந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் நிதியுதவி:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், ஆத்தூர் கிராமம் பரணி பார்க் பள்ளியின் கிழக்குப் பக்கம், நாமக்கல் கரூர் தேசிய நெடுஞ்சாலை, சின்ன வடுகப்பட்டி அருகில் இன்று (17.5.2025) காலை சுமார் 5.30 மணியளவில் பெங்களூருவிலிருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து விபத்தை ஏற்படுத்தியது.
அந்த ஆம்னி பேருந்து முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதி பின்னர் எதிர் சாலையில் கோவில்பட்டியிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த மேக்ஸி கேப் வாகனம் மீது எதிர்பாராதவிதமாக மோதியது

.இந்த விபத்தில் மேக்ஸி கேப் வாகனத்தில் பயணம் செய்த தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த சசிகுமார் (வயது 52) அருண் திருப்பதி (வயது 45) , செல்வன்.காமாட்சி அஸ்வின் (வயது 10), விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி.எழில் தஷனா (வயது 12) ஆகிய 4 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி.ஹேமவர்ஷினி (வயது 20) சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 27 நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும். அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

