சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த திண்டுக்கல் கோர்ட்டு உத்தரவு ரத்து ; ஐகோர்ட்டு அதிரடி

அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த போது 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி சுசீஸா, மகன்கள் செந்தில்குமார், பிரபு ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த சிறப்பு கோர்ட்டு, ஐ.பெரியசாமி உள்ளிட்ட 4 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரமே இல்லை. சொத்துக்களை முறையாக கணக்கிட வில்லை. அதனால், திண்டுக்கல் கோர்ட்டு சரியான உத்தரவை பிறப்பித்துள்ளது என்று கூறப்பட்டது.,
அப்போது, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரமே இல்லை. சொத்துக்களை முறையாக கணக்கிட வில்லை. அதனால், திண்டுக்கல் கோர்ட்டு சரியான உத்தரவை பிறப்பித்துள்ளது என்று கூறப்பட்டது.,

போலீஸ் தரப்பில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது. திண்டுக்கல் கோர்ட்டு நீதிபதி இதை பரிசீலிக்காமல் அனைவரையும் விடுவித்து விட்டார் என்று வாதிட்டப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி பிறப்பித்தார். அதில், ”குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது. எனவே, திண்டுக்கல் கோர்ட்டு உத்தரவை ரத்து செய்கிறேன். இந்த வழக்கை திண்டுக்கல் கோர்ட்டு மீண்டும் விசாரிக்க வேண்டும். இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருப்பதால், தினந்தோறும் என்ற அடிப்படையில், வழக்கை விசாரித்து 6 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும்’ என்று கூறி உள்ளார்.
