கோவில்பட்டி மூப்பன்பட்டி பகுதியில் 23 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் சிக்கினர்

கோவில்பட்டியில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து உயர் ரக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை, சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்து 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கோவில்பட்டி மூப்பன்பட்டி பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து பேக்கிங் செய்து காரில் வைத்து வாடிக்கையாளர்களை குறிப்பிட்ட இடத்துக்கு வரவழைத்து விநியோகம் செய்து வந்தது தெரிய வந்தது.
டி.எஸ்.பி. ஜெகநாதன், இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகம்மது, சப் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்முருகன், தனிப்பிரிவு காவலர்கள் முத்துராமலிங்கம், அருணாச்சலம், செஸ்லின் வினோத், கழுகாசல மூர்த்தி ஆகியோர் அடங்கிய போலீசார் கோவில்பட்டி மூப்பன்பட்டி பகுதியில் முகாமிட்டு ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
நேற்று மாலை மூப்பன்பட்டி மயானம் அருகே நின்று கொண்டிருந்த காரை நோக்கி போலீசார் சென்றபோது, காரில் இருந்து இறங்கி சிலர் தப்பி ஓடினர். போலீசார் துரத்திச் சென்று அவர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

விசாரணையில், அவர்கள் கோவில்பட்டி கழுகாசலபுரம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் மகன் அருண்குமார் (23), கயத்தாறு நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் கொம்பையாபாண்டியன் (21), கயத்தாறு தெற்கு கோனார்கோட்டை பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் மகாராஜா (19) மற்றும் கோவில்பட்டி வ.உ.சி நகரைச் சேர்ந்த குருநாதன் மகன் கார்த்திக் (20) ஆகியோர் என்பதும் விற்பனைக்காக காரில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனடியாக போலீசார் 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 23 கிலோ 720 கிராம் கஞ்சா, ஒரு கார் மற்றும் 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

