கணவரை விபத்தில் பறிகொடுத்த பெண், தூத்துக்குடி ஆட்சியரிடம் புகார்
தூத்துக்குடி தேவர் காலனியைச் சேர்ந்த சங்கரி என்பவர் தனது இரண்டு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறி இருந்ததாவது:-
எனது கணவர் அந்தோணி (34) சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள பாரத் பெட்ரோலியம் எரிவாயு நிரப்பும் ஆலையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். எங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது.
கடந்த 15ம் தேதி இரவு வேலை முடிந்து எனது கணவரும் , அவருடன் பணிபுரியும் பிரபு என்பவரும் இரு சக்கர வாகனத்தில் 3 மைல் ஓடைப்பாலம் வழியாக 11 மணி அளவில் அண்ணா நகர் 12ல் உள்ள பெனிஷா அரிசி கடை அருகில் வந்த போது அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் கட்டுப்பாடு இல்லாமலும் முன் விளக்கு மற்றும் ஒலி எழுப்பாமலும் வந்த கார் மோதியது.
மோதிய பிறகும் குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட இல்லாமல் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டுனர் சென்றுள்ளார்.
கணவரையும் அவருடன் வந்த பிரபு என்பவரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின் எனது கணவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி 20ம் தேதி இறந்தார். இந்த விபத்து குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விபத்தின் உண்மைத் தன்மை குறித்து விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட வேண்டும். எனது குழந்தைகள் மற்றும் எனது வாழ்வாதாரத்திற்கு அரசு உதவ வேண்டும். இல்லையென்றால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன்
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
