கோவில்பட்டியில் குடோனில் பதுக்கிய 28டன் யூரியா பறிமுதல்
கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள ஒரு கிடங்கில் யூரியா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் ரவிக்குமார், ஸ்டீபன் ராஜ் தலைமையில் தனிபிரிவு காவலர்கள் அருண், ரமேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தொழிற்பேட்டையில் உள்ள கிடங்கை கண்டறிந்து ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு 45 கிலோ எடை கொண்ட 630 மூட்டைகள் யூரியா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதன் மொத்த எடை 28 டன் இருக்கும்.
இதனை தொடர்ந்து கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் நேரில் சென்று பார்வையிட்டார். இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோவில்பட்டி வேளாண்மை துறை உதவி இயக்குநர் மணிகண்டன், உதவி வேளாண்மை இயக்குநர்(தரக்கட்டுப்பாடு) கண்ணன், வேளாண்மை அலுவலர்(உர ஆய்வாளர்) காயத்ரி ஆகியோர் அந்தக் கிடங்கை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.பதுக்கல் உர மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.இது குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.