கோவில்பட்டி பூவனநாதசுவாமி கோவிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம்; பக்தர்கள் குவிந்தனர்
சிவ பெருமானுக்குரிய மிக முக்கிய விரத நாட்களில் ஒன்று மார்கழி மாதத்தில் வரக் கூடிய திருவாதிரை நட்சத்திரத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் ஆகும்.
இந்த நாளில் ஆடல் அரசனான நடராஜ பெருமானின் தரிசனத்தையும், அருளையும் பெற வேண்டிய அற்புதமான நாள் என்பதால் இதற்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர்.
சிவ பெருமானின் நடராஜ ரூபத்திற்கு வருடத்திற்கு 6 முறை மட்டுமே அபிஷேக, ஆராாதனைகள் நடைபெறும். அவற்றில் மகா அபிஷேகம் என சொல்லக் கூடியது மார்கழி மாத திருவாதிரையில் நடைபெறும் அபிஷேகம் தான். சேந்தனார் என்ற பக்தனுக்கு சிவ பெருமான் அருள் புரிந்ததன் அடையாளமாக கொண்டாடப்படும் திருநாளே இந்த ஆருத்ரா தரிசன திருநாள்.
ஆருத்ரா தரிசனம் எனப்படும் மார்கழி திருவாதிரை நாளில் நாமும் ஈசனின் அருளை பெற வேண்டும் என்பதற்காக இந்த நாளில் விரதம் இருக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது. அதே போல் பெண்கள், தங்களின் கணவர் நலமுடன் இருக்க வேண்டும், குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக இந்த நாளில் விரதம் இருப்பதும் வழக்கமாக உள்ளது. இந்த நாளில் பெண்கள் தாலி சரடு மாற்றிக் கொண்டு, மாங்கல்ய நோம்பு நோற்பதும் வழக்கமாக உள்ளது.
இப்படி சிறப்பு வாய்ந்த ஆருத்ரா தரிசன திருநாள் இந்த ஆண்டு (இன்று திங்கட்கிழமை )ஆகும்.. ஜனவரி 12ம் தேதி(நேற்று) காலை 11.47 மணிக்கு துவங்கி, ஜனவரி 13ம் தேதி(இன்று) காலை 11.23 மணி வரை திருவாதிரை நட்சத்திரம் இருக்கும்.,
சிதம்பரம் நடராஜர் கோவிலில், காலை நேரத்தில் என்று திருவாதிரை நட்சத்திரம் உள்ளதோ அந்த நாளில் தான் அபிஷேகம் நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு இன்று காலையில் தான் மகா அபிஷேகம் நடத்தப்பட்டு, ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
இதேபோல் கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோவிலில் திருவாதிரையை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
இதனையொட்டி இன்று அதிகாலை 3 மணி கோவில் நடை திறக்கபட்டு, 3.30மணிக்கு திருவனந்தல் பூஜை, 4.மணிக்கு சிவகாமி அம்மாள் சமேத நடராஜபெருமான் மாணிக்கவாசகர் அபிஷேகம் நடைபெற்றது, 4.30மணிக்கு சிறப்புபூஜையும் ,5.30மணிக்கு கோபூஜையும் நடந்து ஆருத்ரா தரிசனம் தாண்டவ தீபாராதனை நடைபெற்றது
கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்