தூத்துக்குடி அருகே வெளிநாட்டினர் கொண்டாடிய பொங்கல் பண்டிகை

 தூத்துக்குடி அருகே வெளிநாட்டினர் கொண்டாடிய பொங்கல் பண்டிகை

சென்னையில் உள்ள “கிளாசிக் ரன்” என்ற தனியார் சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஆட்டோ சேலஞ்ச் சுற்றுலா கடந்த 28-ம் தேதி சென்னையில் தொடங்கியது.

இங்கிலாந்து நியூசிலாந்து ஆஸ்திரேலியா, உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 5 பெண்கள், 16 ஆண்கள் என மொத்தம் 21 பேர்  9 அணியாகப் பிரிந்து 9 ஆட்டோக்களில் சென்னையில் இருந்து புறப்பட்டனர்,

புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை, ராஜபாளையம் வழியாக 3 -ந்தேதி தூத்துக்குடி வந்தனர். நேற்று  சாயர்புரத்தில் உள்ள பிரம்ம ஜோதி பண்ணை தோட்டத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்த்தில் ஈடுபட்டனர்,

தோட்டம் முழுவதும் கரும்பு, மஞ்சள் குலை, வாழை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. ஆட்டோக்களில் தோட்டத்துக்கு வந்த அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், அனைவரும் தமிழர்களின் பாரம்பர்ய உடையான வேட்டி, சேலை அணிந்தனர்.

9 அணிகளுக்கும் அடுப்பு மூட்டி தனித்தனியாக பொங்கல் பானை, பச்சரிசி, நட்டுச்சர்க்கரை ஆகியவை வழங்கப்பட்டன. ஒவ்வொரு அணியும் தனித்தனியாகப் பொங்கல் வைத்தனர். பானையில் பொங்கல் பொங்கி வரும்போது, தோட்டத்தில் பணிபுரிபவர்கள் செய்துகாட்ட, “பொங்கலோ பொங்கல்” என கோஷமிட்டு குலவை சத்தம் எழுப்பினர். 

பொங்கல் வைத்ததும், அந்தந்த அணியினர் வைத்த பொங்கலை வரிசையாக தட்டில் வைத்து பொங்கலை சுவைத்துப் பார்த்த நடுவர்கள் முதல் மூன்று அணியை தேர்வு செய்தனர். அவர்களுக்கு செவ்வாழை, மலை ஏத்தன் உள்ளிட்ட பழங்கள் வழங்கப்பட்டன.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூறுகையில்.”தமிழர்களின் கலாசாரம் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. வேட்டி, சேலை அணியும்போது தனி மரியாதை கிடைக்கிறது. இங்கு ஒன்றுகூடிப் பொங்கல் வைத்தது எங்களது வாழ்க்கையில் மறக்கமுடியாத மகிழ்ச்சியான ஒன்று” என்று தெரிவித்தனர்,

இதை தொடர்ந்து கன்னியாகுமரி வழியாக திருவனந்தபுரம் செல்லும் வெளிநாட்டினர் நாளை 6-ம் தேதி அங்கிருந்து அவரவர் நாடுகளுக்கு திரும்புகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *