கோவில்பட்டியில் சிறார் கதைகள் எழுதுவதற்கான பயிற்சி; எழுத்தாளர் உதயசங்கர் ஆலோசனை
கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தில் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக சிறார் கதைகள் எழுதுவதற்கான பயிற்சிப் பயிலரங்கம் தொடங்கப்பட்டது.
கோவில்பட்டிக் கிளையின் தலைவர் ஆசிரியர் மணிமொழிநங்கை அனைவரையும் வரவேற்றார். சாகித்ய அகாடமி பாலபுரஸ்கார் விருதாளர் எழுத்தாளர் உதயசங்கர் இப் பயிலரங்கத்தை தொடக்கி வைத்தார். அவர் பேசுகையில் கூறியதாவது:-
குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட கதைகளை எழுத வேண்டும், எழுதக்கூடிய கதைகளில் எந்தெந்த கருத்துக்கள் இடம்பெற வேண்டும், நவீன சிறார் இலக்கியத்தின் தோற்றத்தில் கவிமணி, பாரதியார் ஆகியோரின் பங்கினையும், அதனைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்ற சிறார் கதைகளையும் பார்க்கவேண்டும்.
நவீன அறிவியல் மற்றும் உண்மை நிலையினைக் கூறுவதாக சிறார் இலக்கியங்களும், கதைகளும் இருக்க வேண்டும். 3 முதல் 8 வயது குழந்தைகளுக்கான கதைகள் 300 வார்த்தைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும், 8 முதல் 12 வயதுக்கு உண்டான கதைகள் 700 முதல் 800 வார்த்தைகள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். 12 முதல் 18 வயது குழந்தைகளுக்கான கதைகள் 4000 முதல் 5000 வரை உள்ளடக்கிய வார்த்தைகளை கொண்டதாகவும் இருந்தால் சிறப்பாக இருக்கும்.
பறவைகள், விலங்குகள், பூச்சிகள் மற்றும் இயற்கையோடு இயைந்த தொடர்புடைய புதிய புதிய சிந்தனைகள், அறிவுப்பூர்வமான துணிச்சல்கள் கலந்த செயல்பாட்டுக் கருத்துகளைக் கொண்டதாகவும் அமையப் பெற வேண்டும் அதற்கு சிறார் இலக்கியம் தொடர்பான பல கதைப் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை புதிதாக சிறார் கதை எழுதுபவர்கள் அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும்.
பாலியல் கால கருத்துகள், சவால்கள், வியப்பான விஷயங்கள் போன்றவற்றை இக்கால வளர் இளம் குழந்தைகளுக்கு ஆச்சரியமூட்டும் வகையில் அமைந்தால் சிறப்பாக இருக்கும்
இவ்வாறு எழுத்தாளர் உதயசங்கர் பேசினார்.
அடுத்த பயிற்சி பயிலரங்கத்தில் குறைந்தது 3 சிறார் கதைகளை இன்றைய பயிலரங்கத்தில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் எழுதி வரும்படியும் அதனைத் திறனாய்வு செய்து ஒவ்வொரு கட்டமாக இப்பயிற்சியை கொண்டு செல்ல முடியும் என்று உதய சங்கர் தெரிவித்தார்.
இப்பயிற்சிப் பட்டறையில் ஆசிரியர்கள் சுரேஷ்குமார், ராஜேஷ் சங்கரப்பிள்ளை, பொன்ராஜ், முருகேசன், பார்த்தசாரதி, சசி ரேகா, எழுத்தாளர் ராஜலட்சுமி நாராயணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின்.கோவில்பட்டி கிளையின் செயலர், பள்ளி முதல்வர் பிரபுஜாய் நன்றி கூறினார்.