பாத வெடிப்பு ஏன் ஏற்படுகிறது?
பாதங்களில் உள்ள தோல் வறண்டு, புண்ணாகி, வெடிப்பு ஏற்பட்டு வலி வந்த பின்னால்தான் நம் உடலில் அப்படி ஒரு பகுதி இருப்பதையே உணர்கிறோம்.
இதனால் கால்களில் வறண்ட சருமம், சொரசொரப்பான பாதம், பித்த வெடிப்பு, கால் ஆணி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பித்த வெடிப்பு என்பது அழகுப் பிரச்சனையாக மட்டுமின்றி, ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனையாகவும் உள்ளது.
பொதுவாக, சருமம் வறண்டு போகும்போது பாத வெடிப்புகள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக குளிர்காலத்தில் சருமம் அதிகம் வறண்டு போகும். அதனால் பாதங்களில் வெடிப்புகள் உண்டாகும்.
இதனை பொதுவாக நாம் பித்த வெடிப்பு என்று கூறுகிறோம். இது மட்டுமின்றி வேறு சில பிரச்சனைகளாலும் பாதங்களில் வெடிப்புகள் ஏற்படுகின்றன.தோல் வறட்சியும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புகள் ஏற்பட முக்கியமான காரணிகளாக அமைகின்றன.
நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு, பாதத்தில் வெடிப்பு ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு தொற்று ஏற்பட்டு, புண்கள் அதிகமாகி, கடுமையான வலியுடன் வெடிப்புகள் ஏற்படும்.
அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் லேசான வெடிப்புகள் ஏற்பட்டாலே, உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்து தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பாத வெடிப்புகளுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், கால் முழுவதும் தொற்று பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது.
வீடுகளில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவில் தண்ணீரை பயன்படுத்துவார்கள். உப்பு தண்ணீர் அதிகளவில் கால்களில் படுவதால் பாதத்தில் வெடிப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படும் வெடிப்பு புண்ணாக மாறி வலியை உண்டாக்கும்.