மழை வெள்ளத்தால் 3 லட்சம் வாழைகள் சேதம்: விவசாயிகள் கவலை

 மழை வெள்ளத்தால் 3 லட்சம் வாழைகள் சேதம்: விவசாயிகள் கவலை

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் ஆத்தூர் கஸ்பா, மேலாத்தூர், சுகந்தலை, சேதுக்குவாய்த்தான், வடியவேல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த 3 லட்சம் வாழைகள் மழை வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு விவசாயிகல் கவலையடைந்துள்ளனர்.

மழை வெள்ளத்தின் போது அடைக்கப்பட்ட போப்பாஞ்சான் வரப்பாஞ்சான் வடிகால் திறக்கப்பட்டுள்ள நிலையில் மழை வெள்ளம் வடிந்து வருகிறது. இதனிடையே, வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு உதவ வேண்டுமென மேலாத்தூர் ஊராட்சித் தலைவர் சதீஷ்குமார் மற்றும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம், உதவி தோட்டக்கலை அதிகாரி முருகன், விஎஓ ஜெய்லானி ஆகியோர் மேலாத்தூர் பகுதியில் வாழைகள் சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊராட்சித் தலைவர் உடனிருந்தார்.

கனமழையால் மேலாத்தூர் பகுதியில் உள்ள குச்சிக்காடு ஜெ.ஜெ நகரில் 70-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இப்பகுதியில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட மக்கள் மேலாத்தூர் தனியார் மண்டப நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஊராட்சி சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

ஆத்தூர் பகுதி ஆற்றங்கரை தைக்கா காலனியில் 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ஆத்தூர் பேரூராட்சித் தலைவர் கமால்தீன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் மின் மோட்டார்கள் கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *