கூட்ட நெரிசலில் இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பேன்; அல்லு அர்ஜுன் உறுதி
![கூட்ட நெரிசலில் இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பேன்; அல்லு அர்ஜுன் உறுதி](https://tn96news.com/wp-content/uploads/2024/12/INDIA-ENTERTAINMENT-CINEMA-BOLLYWOOD-3_1733976858297_1733976889595.jpg)
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 5-ந் தேதி ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியானது. இப்படத்தின் சிறப்பு காட்சி ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் 4-ந் தேதி இரவு 10.30 மணியளவில் திரையிடப்பட்டது. அதனை காண அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்பட பலரும் சந்தியா திரையரங்கிற்கு சென்றனர்.
அப்போது நடிகர் அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக அதிக அளவிலான ரசிகர்கள் திரையரங்கில் கூடினர். இதனால், ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலில் சிக்கி குடும்பத்தினருடன் படம் பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண் இறந்து போனார். இதனால் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தால் அல்லு அர்ஜுன் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு நம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர், அவர் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி அல்லு அர்ஜுன் தெலுங்கானா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி ஐதராபாத் கோர்ட்டு உத்தரவிட்டது. ஐதராபாத் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியதை அடுத்து, நேற்று காலை அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
இடைக்கால ஜாமீன் பெற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது,
“கடந்த 20 ஆண்டுகளாக எனது திரைப்படம் வெளியாகும் போது திரையரங்கிற்கு செல்வது வழக்கம். இம்முறை துரதிர்ஷ்டவசமாக விபத்து நடந்துவிட்டது. இறந்தவர் குடும்பத்தாருக்கு மீண்டும் ஒருமுறை இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களுக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன். நான் நலமாக இருக்கிறேன், அதனால் எனது ரசிகர்களும், ஆதரவாளர்களும் கவலைப்பட தேவையில்லை. நான் சட்டத்தை மதிக்கிறேன், எனவே சட்ட நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன்”
இவ்வாறு நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்தார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)