• February 7, 2025

மொட்டை மாடியில் பிணமாக கிடந்த சிறுவன் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும்; கடம்பூர் ராஜு

 மொட்டை மாடியில் பிணமாக கிடந்த சிறுவன் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும்; கடம்பூர் ராஜு

சிறுவன் கருப்பசாமி குடும்பத்துக்கு கடம்பூர் ராஜு ஆறுதல் கூறிய காட்சி.

கோவில்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் முருகன்- பாலசுந்தரி தம்பதியின் மகன் கருப்பசாமி(வயது 1௦) அங்குள்ள நகராட்சி பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தான். 

கருப்பசாமிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சூழலில் 9-ந்தேதி காலையில் திடீர் என மாயமானான். பல இடங்களிலும் தேடிபார்த்து கிடைக்காத நிலையில் மறுநாள் காலை பக்கத்துக்கு வீட்டு மொட்டை மாடியில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுவன் கருப்பசாமி சாவில் மர்மம் நீடிகிறது. அவனது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

சம்பவம் நடந்து 3 நாட்களை கடந்தும் இதுவரை உடல் பரிசோதனை அறிக்கை விவரம் வெளியாகவில்லை. உடலும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை.,

இந்த சூழ்நிலையில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ, காந்தி நகரில் கார்த்திக் முருகன் – பாலசுந்தரி தம்பதி வீட்டுக்கு  நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது சிறுவனின் பாட்டி கோட்டைத் தாய் திடீரென மயங்கி விழுந்தார். பின்னர், அருகில் இருந்தவர்கள் தண்ணீர் கொடுத்து அவரை தேற்றி இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு இருந்தால் சிறுவன் கருப்பசாமியை உயிரோடு மீட்டிருக்கலாம். போதை பொருட்களால் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து போய் உள்ளது. உயிரிழந்த சிறுவன் குடியிருக்கும் பகுதியிலும் போதை பொருட்கள் விற்பனை என்பது அதிகமாக நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து இப்பகுதி மக்களும், உயிரிழந்த சிறுவனின் தாய் பாலசுந்தரி ஆகியோர் காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. காவல்துறை விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிப்பட வேண்டும். உயிரிழந்த சிறுவன் குடும்பம் அன்றாடம் வேலை செய்து பிழைக்கக்கூடிய ஏழை குடும்பம். அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *