கஞ்சா விற்பனை பற்றி போலீசுக்கு சொன்னதால்தாயை பழிவாங்க சிறுவன் கொலையா?விசாரணையில் திடுக்கிடும் தகவல்

 கஞ்சா விற்பனை பற்றி போலீசுக்கு சொன்னதால்தாயை பழிவாங்க சிறுவன் கொலையா?விசாரணையில் திடுக்கிடும் தகவல்

கோவில்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக் முருகன்-பாலசுந்தரி தம்பதியரின் 2 வது மகன் கருப்பசாமி (வயது 10). 5 வது வகுப்பு படிக்கும் இந்த மாணவன் உடல்நலக்குறைவு காரணமாக ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லவில்லை.
திங்கட்கிழமை காலையில் அவன் வீட்டில் தனியாக இருந்தான். அவனுக்கு அம்மை போட்டு இருந்ததால் தங்க நகை அணிந்தால் பாதிப்பு குறையும் என்ற நம்பிக்கையில் அவனுக்கு செயின் மற்றும் மோதிரம் அணிவித்து இருந்தனர். இவற்றின் மொத்த எடை 13 கிராம் ஆகும்.
வீட்டீல் தனியாக இருந்தபோது டி.வி,பார்த்துக்கொண்டிருந்த கருப்பசாமி திடீரென மாயமானான், அந்த சமயத்தில் வீட்டுக்கு வந்த அவனது பாட்டி அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்காததால் தீப்பெட்டிஆலை வேலைக்கு சென்று இருந்த தாயார் பாலசுந்தரிக்கு தகவல் கொடுத்து அவர் வந்து பார்த்து விட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாத சூழலில் மறுநாள் செவ்வாய்க்கிழமை காலையில் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் கருப்பசாமி பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வீட்டில் டி.வி.பார்த்துகொண்டு இருந்த கருப்பசாமி எங்கு போனான், அவனை யாராவது கடத்தினார்களா? எங்கு மறைத்து வைத்து இருந்தார்கள்? என்பன போன்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. மாணவர் கருப்பசாமி அவன் மூச்சுத்திணற வைத்து கொலை செய்திருக்கலாம் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் நேரில் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினார். துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையில் கோவில்பட்டி மேற்கு போலீசார் இந்த சம்பவத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
நேற்று திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவிலில் இருந்து துப்பறியும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டன. கருப்பசாமியின் உடைகளை அவன் உடல் கிடந்த மொட்டை மாடியில் போட்டு அதனை துப்பறியும் நாய்களை மோப்பம் பிடிக்க செய்தனர்.
மோப்பம் பிடித்த துப்பறியும் நாய்கள் அங்கிருந்து படிக்கட்டு வழியாக அங்குமிங்கும் ஓடி, காந்திநகர் பகுதியில் போதை பொருள் விற்பனை நடப்பதாக கூறப்படும் பகுதிக்கு சென்றுவிட்டு மறுபடியும் அந்தபகுதிக்கு வந்து விட்டது.
சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் கஞ்சா மற்றும் மது விற்பனை பற்றி கருப்பசாமியின் தாய் பாலசுந்தரி, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொன்னதாக கூறபபடுகிறது. இதை தெரிந்து கொண்ட போதை கும்பல், அவரை பழிவாங்கும் நோக்கத்தில் சிறுவன் கருப்பசாமியை கடத்தி கொன்று இருக்கலாம் என்ற தகவல் புதிதாக வெளி வந்து இருக்கிறது.
.ஏற்கனவே மாணவன் கருப்பசாமி வீடு இருக்கும் பகுதியில் வசிக்கும் 3 பேரை போலீசார் அழைத்து சென்று விசாரித்து வந்த நிலையில் கூடுதலாக நேற்று ஒரு பெண்ணையும் அழைத்து சென்று விசாரிக்கிறார்கள்.
மாணவன் கருப்பசாமி உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை அறிக்கை வந்தவுடன் தான் கருப்பசாமி எப்படி இறந்தான் என்பது பற்றிய விவரம் தெரியவரும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *