புனித பசு பற்றிய புராணக் கதை!

 புனித பசு பற்றிய புராணக் கதை!

பசுவின் உடலில் லட்சுமிதேவி குடியிருக்கிறாள் என்பது மட்டுமே நமக்குத் தெரியும்.ஆனால் அது எப்படி உலகிற்குத் தெரிய வந்தது என்பதற்கு ஒரு புராணக் கதை உண்டு.

முன்னொரு காலத்தில் ஒரு முனிவர் தான் குபேரனுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதற்காக குபேரரைப் போலவே பல வருடங்கள் தண்ணீரில் முழுகி இருந்து தவம் செய்தார்.

அவர் தண்ணீரில் இருந்தது எவருக்கும் தெரியாது. ஒரு நாள் மீன் பிடிப்பவர்கள் தம் வலையை அந்த ஏரியில் போட்டு மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது அந்த முனிவர் அந்த வலையில் மீன்களுடன் மாட்டிக் கொண்டார்.

வெளியே வலையை இழுத்த மீனவர்கள் அதில் இருந்த முனிவரைக் கண்டு அதிசயித்தனர்.ஆனால் தன் தவத்தைக் அவர்கள் கலைத்து விட்ட கோபத்தினால் அவர் அவர்களை சபிக்கப் போனபோது அவர்கள் தம்முடைய அறியாமையினால் செய்து விட்ட காரியத்துக்கு மன்னிப்புக் கேட்டார்கள்.

அவரும் அவர்களை மன்னிக்க ஒரு நிபந்தனை விதித்தார். அந்த ஊர் அரசனிடம் சென்று நடந்ததைக் கூறி தன் தகுதிக்கு சமமான அன்பளிப்பை கொண்டு வந்து தந்தால் அவர்களுக்கு சாபம் தர மாட்டேன் எனக் கூற அவர்கள் மன்னனிடம் சென்று நடந்ததைக் கூறினார்கள்.

மன்னனும், முனிவர்தானே அவர்களை சோதிக்கிறார்  என எண்ணி ஆயிரம் பொற் காசுகளை தந்து அனுப்பினார். அனால் அதைக் கண்ட முனிவர் அதை தொடவில்லை.

அது தனக்கு ஈடல்ல என திருப்பி அனுப்ப மன்னனும் அதையும் இதையும் என ஒவ்வொன்றாக தனது ராஜ்யத்தையே அனைத்து செல்வங்களுடன் தந்தும் கூட முனிவர் திருப்தி அடையவில்லை.

அனைத்தையும் திருப்பி அனுப்பி விட்டார். ஆகவே என்ன செய்யலாம் என குழம்பித் தவித்தபோது அவர் அரசவையில் இருந்த மிகவும் அதிகமான கடவுள் பக்தி கொண்ட பண்டிதர் முனிவரின் எண்ணத்தை புரிந்து கொண்டார்.

அவருக்கு கிருஷ்ணருக்கு துளசி இலையை போட்டு அவர் எடைக்கு சமனாக்கிய கதை நினைவுக்கு வர மன்னனிடம் அந்த முனிவருக்கு ஒரு பசுவை மட்டும் தானமாகத் தரும்படிக் கூறினார்.

அரசன் பயந்தார்.

அத்தனை செல்வங்களுடன் கூடிய ராஜ்யத்தை தந்தும் திருப்தி அடையாத முனிவரா பசுவை எடுத்துக் கொள்வார் என அமைச்சரிடம் கேட்க, அவரோ பயப்படாமல் சென்று அதை செய்யுமாறு கூறினார்.

பசுவை அந்த முனிவர் முன்னால் கொண்டு நிறுத்தி அதை தானமாகத் தந்ததும் முனிவர் அதை மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டு கூறினார் ‘மன்னா இதனுடன் என்னை ஒப்பிடவே முடியாது.

இமயமலை போல உள்ள அதனுடன் என்னை ஒப்பிட்டால் அதன் ஒரு கடுகு அளவுக்குக் கூட நான் சமமல்ல. அதை தந்து என் கண்களைத் திறந்து விட்டீர்கள்.

நான் லட்சுமிதேவி தரும் அனைத்து செல்வத்தையும் அடைய நினைத்தேன். நீங்கள் லட்சுமிதேவியையே எனக்கு தந்து என்னை தலை குனிய வைத்து விட்டீர்கள் ‘ எனக் கூறி மீனவர்களை மன்னித்தார்.

அப்போது அவரிடம் அரசன் ஒரு சந்தேகம் கேட்டார் ‘முனிவரே நான் அத்தனை ராஜ்யத்தை தந்தும் திருப்பதி அடையாத நீங்கள் எப்படி பசுவைத் தந்ததும் , லட்சுமிதேவியையே தந்து விட்டீர்கள் அது போதும் எனக் கூறுகின்றீர்கள்’ எனக் கேட்டார்.

முனிவர் கூறினார் ‘ மன்னா ஒரு முறை விஷ்ணு காமதேனுவை படைக்க எண்ணினார். ஒரு பசுவை வரவழைத்து அதை காமதேனுவாக மாற்ற எண்ணி அனைத்து தேவர்களையும் அழைத்து அதன் உடலில் சென்று அமருமாறு கூறினார்.

அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி அனைத்து தேவர்களும் ஒரு பசுவின் உடலில் சென்று தங்கினர். தாமதமாக வந்த லட்சுமிதேவிக்கு பசுவின் எந்த இடத்திலும் இடம் கிடைக்கவில்லை.

ஆனாலும் பசுவின் உடலில் தான் அமர வேண்டும் என தீர்மானித்து விட்டதினால் காலியாக இருந்த அதன் ஆசன வாயில் சென்று அமர்ந்து கொண்டாள்.

அந்தப் பசு காமதேனுவாக மாறியது. அந்த பசு மூத்திரம் பெய்ய அது லட்சுமிதேவியின் உடலை தழுவிக் கொண்டு வந்தது.

ஆகவேதான் பசுவின் பின்புறத்தை தொட்டு வணங்கினால் லட்சுமிகடாட்சம் கிடைக்கும் என்ற ஐதீகம் வந்தது’ எனக் கூறினார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *