8-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (5-ம் தேதி) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழம் முழுவதும் உள்ள அதிமுகவினர் ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கினர்.
இந்த நிலையில், நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், டி.ஜெயகுமார் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், பெஞ்சமின், வளர்மதி, செல்லூர் ராஜு உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முகப்பேர் இளஞ்செழியன் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிட நுழைவாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி வாசிக்க அதை அனைவரும் திரும்ப வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
முன்னதாக சென்னை பெருநகர மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
மேலும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுசெயலாளர் தினகரன், சசிகலா ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.