கூகுள் மேப் வழிகாட்டிய பாதையில் சென்ற போது விபரீதம்: கட்டிமுடிக்கப்படாத பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்த கார்- 3 பேர் உயிரிழப்பு
![கூகுள் மேப் வழிகாட்டிய பாதையில் சென்ற போது விபரீதம்: கட்டிமுடிக்கப்படாத பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்த கார்- 3 பேர் உயிரிழப்பு](https://tn96news.com/wp-content/uploads/2024/11/up-car-850x560.jpg)
உத்தரப்பிரதேசம் மாநிலம் பருகாபாத்தை சேர்ந்த 3 பேர் திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காக, குருகிராமில் இருந்து பதாவுன் மாவட்டத்தில் உள்ள பரேலிக்கு காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர். திருமணம் நடக்கும் இடத்திற்கு செல்ல வழி தெரியாததால் கூகுள் மேப் காட்டிய வழியில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, பரித்பூர் என்னும் இடத்தில் செல்லும்போது கூகுள் மேப் மேம்பாலம் ஒன்றில் ஏறி செல்லும்படி வழியை காட்டியுள்ளது.
அது சரியான வழி என நம்பி சென்ற மூவரும் அந்த பாலத்தில் சென்றுள்ளனர். ஆனால், அது கட்டி முடிக்கப்படாத பாலம் என்பதை அறியாத அவர்கள் தொடர்ந்து அப்பாலத்தில் பயணிக்கவே, பாலத்தில் இருந்து 50 அடி ஆழத்தில் இருந்த ராமகங்கா ஆற்றில் காரோடு விழுந்துள்ளனர். இதனால், சுக்கு நூறாக கார் நொறுங்கவே, பயங்கர சத்தம் கேட்டு உடனடியாக அங்கு வந்த கிராம மக்கள் காரை ஆற்றில் இருந்து வெளியே எடுத்துள்ளனர். ஆனால், அதற்குள் காரில் இருந்த 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், விபத்து தொடர்பாக காவல்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் கொடுக்க, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மூவரின் உடலையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து, உடல்களை பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)