ஐந்தாவது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு
கோவில்பட்டி வட்டத்தில் வரும் 20ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் உங்கள தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் கோரிக்கைகள், குறை நிறைகளை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதற்கு முன்னோடியாக கோவில்பட்டி தாலுகாவில் உள்ள குறு வட்டங்களான கோவில்பட்டி, இளையரசனேந்தல், கழுகுமலையில் வெள்ளிக்கிழமையன்று பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனு அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மனு வழங்கும் நிகழ்ச்சி குறித்து மக்களுக்கு தெரியாத நிலை உள்ளதாகவும், முறையாக அறிவிப்பு செய்யாமல், அரைகுறையாக நிகழ்ச்சி ஏன் நடத்துகின்றனர் என்று கேள்வி எழுப்பி கோவில்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஐந்தாவது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அங்கிருந்த பிளாஸ்டிக் சேரை எடுத்து வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு போட்டு அமர்ந்து கொண்டு , அங்கிருந்த அதிகாரிகளிடம் கேள்விகள் கேட்கத் தொடங்கினார்.
ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற செயலாளர்களுக்கு, ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் முன்னோடி மனு முகாம் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த அறிவுத்திருந்ததாக அங்கிருந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்போது அங்கு வந்த ஒரு ஊராட்சி மன்ற தலைவர் அப்படி ஒன்றும் தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என தெரிவித்தார். நீங்கள் வேண்டுமென்றே இந்த நல்ல திட்டத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற வகையில் பொதுமக்களுக்கு தெரிவிக்காமல் இருந்ததாக கூறி ஐந்தாவது அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
முறையாக மக்களுக்கு அறிவித்துவிட்டு கோரிக்கை மனுக்களை பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கிடையில் அங்கு வந்த ஒரு பெண் தனக்கு மகளிர் உரிமைத் தொகை வரவில்லை என்றும், இது தொடர்பாக பலமுறை விண்ணப்பம் செய்தும் பயனில்லை, கள ஆய்வில் இருக்கிறது கள ஆய்வில் இருக்கிறது என்று கூறி பல மாதங்களாக தன்னை அலைக்கழிப்பதாக கூறி கண்ணீர் விட்டார்.
அப்போது அங்கிருந்த சமூக நல பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராமகிருஷ்ணன் அந்த பெண்ணை அழைத்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
.இதற்கிடையில் பணி செய்ய விடமால் தடுத்தாக கோவில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கவிதா , போராட்டத்தில் ஈடுபட்டதாக சங்கரலிங்கம், ராஜேஷ் கண்ணா, பரமசிவம், குருசாமி, முருகன் ஆகிய 5 பேர் மீது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.