தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்கள் 2 வது நாள் வேலை நிறுத்த போராட்டம்
தூத்துக்குடி மாநகராட்சியில் அவர்லேண்ட் என்ற தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தூத்துக்குடி மாநகராட்சி முன்பு சாலையில் அமர்ந்து ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, நீதிமன்ற உத்தரவின்படி தூய்மைப் பணியாளர்களுக்கு தினக் கூலியாக ரூ.725, ஓட்டுநர்களுக்கு ரூ.763, டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கு ரூ.725 வழங்க வேண்டும், தூய்மை பணியில் கான்ட்ராக்ட் முறையை ரத்து செய்துவிட்டு தூய்மை பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.10 ஆயிரம் முன்பணம், கரோனா காலத்தில் பணி புரிந்ததற்காக சிறப்பு தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அதைத்தொடர்ந்து, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உரிய உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து நேற்று 2வது நாளாக தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தூய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணி பாதிக்கப்பட்டுள்ளது.