குலசேகரன்பட்டினத்தில் இன்று நள்ளிரவில் சூரசம்ஹாரம்
இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
தசரா திருவிழாவையொட்டி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெரும்பாலான ஊர்களிலும் விரதம் இருந்து காப்பு கட்டி பல்வேறு வேடங்களை அணிந்த பக்தர்கள் ஒவ்வொரு ஊரிலும் வீதி வீதியாக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களின் அருகில் பிறை அமைத்து தங்கியிருந்து அம்மனை வழிபடுகின்றனர்.
ஒவ்வொரு தசரா குழுவிலும் காளி, சிவன், பிரம்மன், விஷ்ணு, விநாயகர், முருகபெருமான், ராமர், கிருஷ்ணர், நாராயணர், அனுமர் உள்ளிட்ட பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்த பக்தர்கள் அணிவகுத்து செல்வது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. அரசன், குறவன், கரடி, கிளி, புலி போன்ற வேடங்களையும் சில பக்தர்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து வழிபடுகின்றனர்.தசரா குழுவினருடன் நாட்டுப்புற கலைஞர்களும் சென்று கரகாட்டம், சிலம்பாட்டம், மேற்கத்திய நடனம் போன்றவற்றை நடத்துகின்றனர். தென்மாவட்டங்களில் காணும் இடமெல்லாம் சுவாமி வேடங்களை அணிந்த பக்தர்களாகவே காட்சியளிப்பதால் தசரா திருவிழா களைகட்டியது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் 10-ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) நள்ளிரவில் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி, மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.